யாழ். ஊர்காவற்துறை தம்பாட்டி மீன்பிடி துறைமுகத்தில், கடற்படைக்கு காணி அளவீடு செய்ய, மக்கள் எதிர்ப்பு

0
136

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தம்பாட்டி மீன்பிடி துறைமுகத்தில், கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை, கடற்படைக்கு வழங்க அளவீடு செய்வதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றுள்ளனர்.

தம்பாட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கான பிரதான வாயிலில் அமைக்கப்பட்டுள்ள, கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை, கடற்படையினருக்கு சுவீகரித்துக் நோக்கில், காணியை அளவீடு செய்வதற்கு, நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், இன்று சென்றிருந்தனர்.

இந்தக் காணியை அளவீடு செய்வதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு, வீதியை இடைமறித்து, கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடற்படை முகாமுக்கான காணியை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனவும், மக்களுக்கு இடையூறாக இருக்கின்ற கடற்படை முகாமை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு, அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடீபட்டதால், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், மக்களிடம் இருந்து கடிதம் பெற்றுக்கொண்டு, காணியை அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றனர்.