யாழ். மருதங்கேணி பகுதியில், மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார்!

0
200

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில், பொலிஸார் வீடு புகுந்து தாக்கியதாகவும், அதனால், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நேற்று இரவு 7.30 மணியளவில், மருதங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள், திடீரன உட்புகுந்த பொலிஸார், அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஆண் மீது தாக்கியதாகவும், ஏன் தாக்குகின்றீர்கள் என கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாம், பொலிஸார் தொடர்ச்சியாக தாக்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது ஆத்திரமுற்ற பாதிக்கப்பட்டவர்கள், பதிலுக்கு, பொலிஸார் மீது கல்லெறி தாக்குதல் நடத்தியதாகவும், அவ்வேளை பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் காயமடைந்த 19 வயதுடைய பெண்ணை, வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை வழிமறித்த, பொலிஸார், நீண்ட நேரத்திற்கு பின்னர், காயமடைந்த பெண்ணை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல அனுமதித்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில், மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம், தொலைபேசியில் வினவப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய பொறுப்பதிகாரி, கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிசூடு ஏதும் நடத்தவில்லை எனவும் தெரிவித்ததுடன், குறித்த நபரை, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட நபருக்கு, ஏற்கனவே கசிப்பு விற்பனை தொடர்பான வழக்கு ஒன்று இடம்பெற்று வருவதாகவும், மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.