முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வெளிநாட்டுப் பயணங்களில் பரப்பரப்பாக இருக்கிறார். சர்வதேச மகாநாடுகளில் அவ்வப்போது கலந்து கொள்கிறார். இப்போதும், இந்திய பிரமதர் மோடியின் அழைப்பில் இந்தியா சென்றிருக்கிறார்.
‘தெற்காசியாவின் வளர்ச்சியும் சவால்களும்’, பற்றி அங்கு உரையாற்றவுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ரணில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியாக வரவேண்டும் என்னும் அவரின் வாழ்நாள் ஆசையை பூர்த்தி செய்ய முடியாதவராக வெளியேற நேர்ந்தது. இவ்வாறு வெளியேறினாலும் கூட அரசியல் அரங்கில் தான் ஒரு தவிர்க்க முடியாத நபர் என்பதை அடையாளப்படுத்தும் நோக்கில் தொடர்ந்தும் பரபரப்பாகவே இருக்கிறார்.
அவருக்குள்ள சர்வதேச தொடர்புகளின் அடிப்படையில், அதிகாரத்தில் இல்லாதபோதும்கூட அவரால் தனக்கொரு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. ஒருவேளை அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொள்ளும்போது மீண்டும் தனது தேவை ஏற்படலாம் – அதன் காரணமாக பரபரப்பாக இருப்போம் என்றும் அவர் எண்ணுகிறாரோ? சில தினங்களுக்கு முன்னர் இளைஞர்கள் மத்தியில் புவிசார் அரசியல் விடயங்கள் தொடர்பில் பேசியிருக்கிறார். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இரட்டை நிலைப்பாட்டை பேணுவதாகவும் இந்த விடயத்தில் அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியிருக்கும் நிலையில் இவ்வாறானதொரு கருத்தைத் தெரிவிப்பது அவருக்கு இலகுவாகவும் இருக்கக்கூடும். ட்ரம்ப் நிர்வாகம் வெளியேறியிருப்பது குடியரசு கட்சியின் கொள்கை நிலைப்பாடாகும். அதாவது, குடியரசு கட்சியின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதனை அவர்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர். குடியரசுக் கட்சியும் மனித உரிமைகள் பேரவை பக்கச் சார்பானது, இஸ்ரேல் விடயத்தில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்னும் குற்றச்சாட்டுகளையே முன்வைக்கிறது.
அந்தக் குற்றச்சாட்டையே ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு ஏற்றவாறு மாற்றிக் கூறுகிறார். இங்கு விடயம், இதே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது தான் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி – அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாக்குறுதியும் வழங்கப்பட்டது. இந்த அடிப்படையில் ரணில் – மைத்திரியின் அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என்று கூறி சம்பந்தனின் கூட்டமைப்பும் ரணிலுடன் தேனிலவில் திளைத்த கதையை இப்போது மக்கள் மறந்து போயிருக்கலாம். ஆனால், இன்று அதே ரணில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவை இரட்டை நிலைப்பாட்டைப் பேணி வருவதாகக் கூறுகிறார்.
பேரவையின்மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் உண்டுதான். மனித உரிமைகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பல நாடுகளின் அரசியல்வாதிகளும் அவ்வப்போது கூறுவதுதான். ஆனால், அதனை ரணில் கூறுவதுதான் ஆச்சரியமானது. அரசியலில் ஒருவர் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார் என்பதற்கான ஓர் உதாரணமாக இதனை எடுத்துக் கொள்ளலாம். ஜனாதிபதித் தேர்தலின்போது, தமிழ் அரசுக் கட்சி ஒருபுறமும் ஏனைய கட்சிகள் மறைமுகமாகவும் தங்களுக்கு விருப்பமானவர்களை ஆதரிப்பதற்காக முட்டி மோதிக் கொண்டன. அரசியலில் நபர்களை நம்பி – அவர்களுடன் தங்களுக்குள்ள நெருக்கத்தைப் பெருமையாக எண்ணிக் கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் இனியாவது சிந்தியுங்கள்.