வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்

0
487

வரலாற்று சிறப்பு மிக்க, யாழ்ப்பாணம் வடமராட்சி அருள்மிகு வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந்திருவிழா, இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை 5.15 மணியளவில், கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில், அர்ச்சகர்களின் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 8:45 மணியளவில், கொடியேற்றம் இடம்பெறவுள்ளது. 17 தினங்கள் நடைபெறும் பெரும் திருவிழா, எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவடையவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை, வல்லிபுரத்து ஆழ்வார், உள் வீதி வலம் வருவார். எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து, வல்லிபுரத்து ஆழ்வார், குருக்கட்டு விநாயகர் ஆலய தரிசனத்துடன், அனைத்துத் திருவிழாக்களின் போதும், வெளி வீதி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முக்கிய திருவிழாக்களான, வெண்ணெய்த் திருவிழா, எதிர்வரும் 2 ஆம் திகதியும், துகில்த் திருவிழா, எதிர்வரும் 3 ஆம் திகதியும், பாம்புத்திருவிழா, எதிர்வரும் 4 ஆம் திகதியும், கம்சன் போர்த் திருவிழா, 5 ஆம் திகதியும், வேட்டை திருவிழா 6 ஆம் திகதியும், சப்பறத்திருவிழா 7 ஆம் திகதியும், தேர்த்திருவிழா 8 ஆம் திகதி சனிக்கிழமையும், சமுத்திர தீர்த்ததிருவிழா 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், கேணி தீர்த்தம் 10 ஆம் திகதி திங்கட்கிழமையும், கொடி இறக்கம், அன்றைய நாள் பிற்பகல் 6.00 மணிக்கும் இடம்பெறவுள்ளன. பெருந் திருவிழாக்களுக்கான வசதிகள் அனைத்தும், ஆலய நிருவாகம், பருத்தித்துறை பிரதேச சபை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், பருத்தித்துறை பொலிஸ் நிலையம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆலயத்திற்கு வருகை தருவோர், கலாசார உடை அணிந்து, தங்க ஆபரணங்கள் அணிவதை தவிர்த்து வருகை தருமாறு, வல்லிபுர ஆழ்வார் ஆலய நிர்வாகம், கோரிக்கை விடுத்துள்ளது.