விமல் வீரவன்ச, கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்டமை அரசியல் நாடகம்- திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி

0
133

விமல் வீரவன்ச, கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளிலிருந்த நீக்கப்பட்டமை ஒரு அரசியல் நாடகம் என்றே நான் கருதுகின்றேன். அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியை களைவதற்காகவே இவ்வாறான ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகின்றது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கூறிய விடயங்களை வைத்து, அமைச்சுப் பதவிகளிலிருந்து அவர்கள் நீக்கப்பட்ட விடயத்தில் அரசியல் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டிருப்பதை மக்கள் தெளிவாக புரிந்துக்கொண்டிருப்பர்.

ஐக்கிய மக்கள் சக்தி அல்லது வேறு கட்சிகளை கட்டியெழுப்புவது குறித்து அவர்கள் அங்கு கருத்து கூறவில்லை. அரசாங்கத்துக்குள் உட்பூசல் ஏற்படும்போது, நாட்டுமக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொள்ளும்போது அதற்காக அவர்கள் முன்வந்து மக்களை அரசாங்கத்தின் பக்கம் இழுப்பதற்காக இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றுகின்றனர்.

நாட்டின் பிரச்சினைகள் தற்போதைய நிலையில் முடிவுக்கு வராது. அரசாங்கம் மாறுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை. இந்த அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

நாட்டுமக்களுக்கு டீசலை விநியோகிக்க முடியவில்லையாயின், தேவையான எரிவாயுவை விநியோகிக்க முடியவில்லையாயின், அதேபோன்று நாட்டுக்கு தேவையான உணவுப் பொருட்களை விநியோகிக்க முடியவில்லையாயின், மின்சாரத்தை விநியோகிக்க முடியவில்லையாயின் அரசாங்கம் என்ற ஒன்று எதற்கு?

மக்கள் இதனையே கேட்கின்றனர். அரசாங்கமானது, மக்கள் சேவையை எந்தப் பிரச்சினைகளும் இன்றி முன்னெடுக்க வேண்டுமென்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனை செய்வதற்கு அரசாங்கம் அசமந்தப்போக்கைக் கடைப்பிடிக்கின்றது.

டொலர் இன்மை மக்களது பிரச்சினை அல்ல. டொலர்; பெறும் வழிகளை அதிகரித்து மக்கள் சேவையை முன்னெடுக்க முடியும் என்று கூறியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

எனவே அவ்வாறு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லையாயின் அரசாங்கம் என்ற ஒன்று எதற்கு?

அரசாங்கத்துக்கு வீட்டுக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு இல்லாமல் பலவந்தமாக இருந்துகொண்டு ஆட்சி செய்ய நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பர்.