விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் ஜனவரி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் மஹிந்தானந்த

0
293

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.


இந்த ஓய்வூதிய திட்டம் 2010 இல் நிறுத்தப்பட்டது. மேலும், 2014 முதல் இடைநீக்கம் செய்யப்பட்ட வாழ்க்கைத் துணைவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


இதேவேளை உலக பாரம்பரிய நகரமான பொலநறுவை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்யப்படும். பொலநறுவை மாவட்டத்தைப் பண்டைய மற்றும் சூழல் பாதுகாப்பான சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் அடுத்தாண்டுக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதன் கீழ், முறையான சுற்றுலா தகவல் மையமொன்றை பொலநறுவையை மையமாகக் கொண்டு ஆரம்பித்து, சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தால் உலக பாரம்பரிய சுற்றுலா நகரமாக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஊக்குவிக்க விசேட வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொலநறுவை மாவட்ட செயலக காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற வாழ்வாதார அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடலில் இத்தீர்மானம் எட்டப்பட்டது. பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ஷ, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் வழிநடத்தலில் செயல்படுத்தப்படும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்திற்கு ஏற்ப இந்த வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

பொலநறுவையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்வதற்காக இதுவரை கலாசார அமைச்சு, தொல்பொருள் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்துடன் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து இதுவரை வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இதற்கு மேலதிகமாக சுற்றுலா ஹோட்டல் பாடசாலையொன்;றை பொலன்னறுவை மாவட்டத்தில் அடுத்த ஆண்டுக்குள் ஆரம்பிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு மேலதிகமாக பொலநறுவை மாவட்டத்தில் வனஜீவராசிகள் வலயத்தை அண்மித்த பகுதியில் சூழலுக்குப் பாதுகாப்பான சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய பொலநறுவை மாவட்டத்தில் நீர்ப்பாசன சுற்றுலா திட்டத்தை மேம்படுத்துவதற்கும், மாதுறுஓய, சோமாவதி மற்றும் வாஸ்கமுவ ஆகிய வனப்பகுதிகளை அண்மித்து சுற்றாடல் பாதுகாப்பான திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.