வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்டு தொழிற்பயிற்சி திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடல்

0
104

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்டு தொழிற்பயிற்சி திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் தொழிற்பயிற்சி அதிகார சபைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

ஜப்பானில் தாதியர்களுக்கான வேலைவாய்ப்புகள், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்புகள், ஐரோப்பிய நாடுகளில் தாதியர் வேலை வாய்ப்புகள், சவுதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் தொழில் வாய்ப்புகள் என்பன பாரிய அளவில் இலங்கைத் தொழிலாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளன.

குறித்த தொழில்வாய்ப்பு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பயிற்சிபெற்ற தொழிலாளர்களை வழங்க முடியவில்லை என்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்திற்கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்டு தொழிற்பயிற்சி திட்டத்துக்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையானது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களைக் கொண்ட நிபுணர்களைப் பயிற்றுவித்து, அவர்களுக்கு தேசிய தொழில் தகைமைகளை வழங்குவது மற்றும் பிற தொழில்முறை சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதில், தொழிற்பயிற்சி அதிகாரசபையில் பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தின் கீழ், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

எனினும் பயிற்சி அளிப்பது என்பது எமது பிரதான நோக்கம் கிடையாது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிகளை ஒழுங்குப்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும்.

வேலைவாய்ப்புக்காக தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான முதன்மை பொறுப்பு கல்வி அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகப் பயிற்சிப் பணியிலிருந்து படிப்படியாக விலகி, தற்போதுள்ள அரச துறையில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒப்படைக்க முடிவெடுத்தோம். இது ஒரு கொள்கை முடிவாக செயல்படுத்தப்படுகிறது.