2010 – 2025 காலப்பகுதியில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனி, வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (தனியார்) கம்பனியில் இடம்பெற்றுள்ளதாகக் கருத்தப்படும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து விபரங்களுடன் கூடிய விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் கணக்காய்வாளர் தலைமை அதிபதி எச்.எம்.காமினி விஜேசிங்கவின் தலைமையிலான ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்காக அமைச்சரவை அனுமதி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனியின் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காகபங்களிப்பு வழங்கினாலும், அதனை மேற்கொண்டு நடாத்திச் செல்வதற்கு அரசுக்கு அதிக செலவுச்சுமைநேரிட்டுள்ளமையால், குறித்த கம்பனிக்கு ஆண்டுதோறும் ஏற்படுகின்ற அதிக நட்டத்தை தாங்கிக்கொள்வதற்கு சிரமமங்கள் தோன்றியுள்ளன.
இக்கம்பனியை பொருளாதார ரீதியாக அனுகூலங்களுடனும், வினைத்திறனாகவும், பயனுறுவாய்ந்த அரச நிறுவனமாக மாற்றியமைத்து, நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக மேற்கொண்டு நடாத்திச் செல்வதே பொதுமக்களின் விருப்பமாகவுள்ளது.
அதற்காக, வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனிக்கு சமகால நிலைமை ஏற்படுவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் தொடர்பாக கடந்த காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள பரிவர்த்தனைகள் மற்றும் சம்பவங்கள் பற்றி முறையான ஆய்வு மற்றும் மதிப்பீடொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அத்துடன் விமான நிலைய தொழிற்பாடுகள் தொடர்பாக பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீலங்கா)(தனியார்) கம்பனியின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை பற்றி பல்வேறு தரப்பினர்களும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
அதற்கமைய, 2010 – 2025 காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருத்தப்படும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து விபரங்களுடன் கூடிய விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் கணக்காய்வாளர் தலைமை அதிபதி எச்.எம்.காமினி விஜேசிங்கவின் தலைமையிலான ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.