அடுத்த அமெரிக்க அதிபர் யார்? : இன்று முடிவு தெரியும்!

0
219

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப் பதிவு தொடங்கியது. ஏற்கனவே 10 கோடி பேர் தபால் வாயிலாக வாக்களித்துள்ள நிலையில் மேலும் ஆறு கோடி பேர் நேரில் வாகாகளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

குடியரசு கட்சி சார்பில் துணை அதிபர் மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி சார்பில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மொத்தம் 23.9 கோடி மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். அதில் 67 சதவீதம் பேர் அதாவது 16 கோடி பேர் வாக்களிப்பர் என கணிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 10 கோடி பேர் வாக்களித்துள்ள நிலையில் மேலும் ஆறு கோடி பேர் வாக்கு அளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப் பதிவு துவங்கியுள்ளது. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை வரை ஓட்டுப் பதிவு நடக்கும். அதன்பிறகே ஓட்டு எண்ணிக்கை துவங்கும். தபால் ஓட்டுகள் அதிகம் பதிவாகியுள்ளதால் ஓட்டு எண்ணிக்கை
முடிவதற்கு தாமதமாகும்.

இதற்கு முன் நடந்துள்ள பல தேர்தல்களில் முடிவு தெரிவதற்கு சில வாரங்கள் கூட ஆனது. இலங்கை நேரப்படி இன்று இரவுக்குள் யார் முன்னிலையில் உள்ளார்என்பதை தெரிந்து கொள்ளலாம். மக்கள் அளிக்கும் இந்த ஓட்டுகள் ‘பாப்புலர்’ ஓட்டுகள் எனப்படுகிறது. மக்கள் எந்த வேட்பாளருக்கு அதிக ஓட்டுகளை அளித்துள்ளனர் என்பதை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாகாணத்திலும் எந்தக் கட்சிக்கு அதிக ‘எலக்டோரல் காலேஜ்’ எனப்படும் வாக்காளர் குழு ஓட்டு கிடைக்கிறது என்ற விஷயமே வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும். மொத்தமுள்ள 538 ஓட்டுகளில் 270க்கும் அதிகமான ஓட்டுகளை பெறுபவரே அதிபராக முடியும்.