அமெரிக்கத் தடையை தொடர்ந்து

0
55

சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மேற்காசிய விவகாரங்கக்கான உதவி இராஜாங்க செயலர் டொனால்ட் லூ கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது, ஜனாதிபதி உள்ளடங்கலாக பலரை சந்தித்திருந்தார். அமெரிக்காவில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக வந்திருக்கும் நிலையில் இந்த விஜயம் இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்புக்களின் போது இலங்கையின் ஊழல் விடயங்களை கண்டறிவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இலங்கையின் இரண்டு அதிகாரிகள் விமானக்கொள்வனவின் போது லஞ்சம் வாங்கியதான குற்றச்சாட்டின் பெயரில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் ராஜபக்ஷக்களுக்கு நெருக்கமானவர்கள். அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் ஊழல் குற்றச்சாட்டுக்களை வெளிப்படையான விசாரணைக்கு உட்படுத்தப் போவதாக கூறிவருகின்ற நிலையில், அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

இந்த இரண்டு அதிகாரிகளுக்கும் எதிரான சட்ட நடவடிக்கையை அநுர அரசாங்கம் மேற்கொள்ள முடியும் – அவர்களது சொத்துக்களை முடக்க முடியும் – அதனை அநுர அரசாங்கம் செய்யுமா? நல்லாட்சி அரசாங்கம் என்னும் பெயரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காலத்தில், அப்போதைய அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் ஹெரி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அப்போதும் இப்போது போல்தான் ராஜபக்ஷக்களின் குற்றங்களை விசாரிக்கப் போவதாக ரணி;ல் – மைத்திரி அரசாங்கம் கூறிக்கொண்டிருந்தது. ஜோன் ஹெரி இலங்கையில் உரையாற்றும் போது, கடுமையான நடவடிக்கைகளுக்கு அஞ்ச வேண்டாம் – அமெரிக்கா உங்களுக்கு ஆதரவாக இருக்குமென்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், நடந்ததோ வேறு – ராஜபக்ஷக்கள் தெடர்பில் ஓர் ஆவணத்தைக் கூட ரணில் – மைத்திரி அரசாங்கம் வெளியிடவில்லை. இறுதியில் மைத்திரி பாலசிறிசேன, மகிந்த ராஜபக்ஷவையே பிரதமராக்கினார். இந்த அனுபவங்களிலிருந்து நோக்கினால் அநுர அரசாங்கம் ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமா என்பதும் கேள்விதான்.ஏனெனில், ஊழல் என்னும் பெயரில் சிறிய மீன்களுக்கு தூண்டில் போடுவதில் பயனில்லை. கடந்த காலத்திலும் அப்படித்தான் நடந்திருக்கின்றது. பெரிய மீன்களை இலக்கு வைக்கும் விசேட நடவடிக்கை ஒன்றை அநுர அரசாங்கம் முன்னெடுத்தால்தான், அவர்கள் ஏனைய ஆட்சியாளர்களிலிருந்து வேறுபட முடியும் – இல்லாவிட்டால் அநுரவும் பத்தோடு பதினொன்றுதான். இலங்கையின் அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்புக்களில் ஊழல் விரவிக்கிடக்கின்றது என்பதே பொதுவான குற்றச்சாட்டு. இதனை மாற்றியமைக்கும் ஓர் ஆட்சியை வழங்கப் போவதாகவே அநுர தரப்பு கூறிவந்தது. ஆனால், இலங்கையின் அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புக்களில் அவ்வாறான மாற்றங்களை இலகுவாக ஏற்படுத்த முடியுமா என்பதுதான் கேள்வி.