Home கட்டுரை அமெரிக்கத் தேர்தல்: மல்யுத்தம் நெருங்கிவிட்டது!

அமெரிக்கத் தேர்தல்: மல்யுத்தம் நெருங்கிவிட்டது!

0
அமெரிக்கத் தேர்தல்: மல்யுத்தம் நெருங்கிவிட்டது!

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்குப் பதிவுக்கு முன்பாக இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடெனுக்கு தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைவிட ஆதரவு அதிகரித்துக்கொண்டே வருவதுபோல் தோன்றுகிறது. அதே நேரத்தில், தேர்தலில் வென்றுவிடலாம் என்று அதீத நம்பிக்கையுடன் ஜனநாயகக் கட்சி இருந்துவிட முடியாது என்பதை எச்சரிக்கும் அறிகுறிகளும் உள்ளன.

முதலாவதாக, பெருந்தொற்றின் தாக்குதலைக் கருத்தில் கொள்ளுங்கள். அமெரிக்கப் பொருளாதாரத்தை அது நிலைகுலையச் செய்துள்ளது. தொழில் துறையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான மந்தநிலையால் ஏப்ரல் 2020-ல் வரலாறு காணாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் (14.7%) ஏற்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, வேலையில்லாத் திண்டாட்டத்தின் விகிதம் குறைந்திருக்கிறது. என்றாலும், உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்தி, பொருளாதாரத்தை உயிர்ப்போடு மறுபடியும் இயங்கச் செய்யும் விதத்தில் லாகவமான, அறிவியல் அடிப்படையிலான பெருந்தொற்றுத் தடுப்பு உத்தி ஒன்றைப் பின்பற்றுவதில் அமெரிக்காவின் கூட்டரசு அடைந்த தோல்வியை அது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

ட்ரம்ப்பைப் பலரும் திறமையற்ற ஒரு தளபதியாகக் கருதலாம். முகக்கவசங்கள், பொது முடக்கங்கள், தனிமனித இடைவெளி போன்றவையெல்லாம் மக்களை அச்சுறுத்த ஜனநாயகக் கட்சியினர் முன்வைக்கும் உத்தி என்று ட்ரம்ப் தாக்கிப் பேசியிருக்கிறார். எனினும், வாக்காளர்களில் கணிசமானோர் முகக்கவசம் அணிதல் குறித்த விதிமுறைகளை வெறுப்பதுடன், பொது முடக்கத்தால் ஏற்படும் பெரும் பொருளாதாரப் பாதிப்பு குறித்து அஞ்சுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வெள்ளையினத்தோர், சிறுநகரங்களையும் கிராமப்புறங்களையும் சேர்ந்தவர்கள்; இவர்களில் பெரும்பாலானோர் உடலுழைப்புத் தொழிலாளர்களாகவும் சிறுதொழில் உரிமையாளர்களாகவும் இருப்பவர்கள். இங்கேதான் அமெரிக்கர்களின் உளப்பாங்கைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

கருத்துக் கணிப்புகள்

இதனால்தான், சமீபத்திய கருத்துக் கணிப்புகள் 53%-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் ட்ரம்ப்பின் செயல்பாடுகளை ஏற்கவில்லை என்றும் 41%-க்கும் கொஞ்சம் அதிகமானோர் மட்டும் ட்ரம்ப்பை ஆதரிக்கிறார்கள் என்றும் கூறினாலும் அவரை ஏற்போரின் எண்ணிக்கையில் அவ்வளவாக மாற்றம் இல்லை. ட்ரம்புக்குத் தீவிர ஆதரவை அளிப்பதுடன் அவருக்கு வாக்களிக்கக்கூடிய வாக்காளர்கள் இருப்பதை மட்டும் இது உணர்த்தவில்லை, வாக்காளர்கள் இரு துருவங்களாக எந்த அளவுக்குப் பிளவுபட்டிருக்கிறார்கள் என்பதையும் இது உணர்த்துகிறது; ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் 87% குடியரசுக் கட்சியினர் அவரது ஆட்சி நிர்வாகம் நன்றாக இருந்தது என்று கூறியிருக்கிறார்கள்; அவரது ஆட்சி நிர்வாகம் நன்றாக இருக்கிறது என்று 6% ஜனநாயகக் கட்சியினர் மட்டுமே கூறியிருக்கின்றனர்.

இரண்டாவதாக, இந்தத் தேர்தலின் முடிவு இதுவரை யாருக்கு வாக்களிப்பதென்று தீர்மானிக்காத வாக்காளர்களையும் எந்தக் கட்சியையும் சாராத வாக்காளர்களையும் பெரிதும் சார்ந்து இருக்கும். ஆதரவுத் தளத்தில் இப்படியும் அப்படியும் என்று ஊசலாடிக்கொண்டிருக்கும் ஃப்ளோரிடா, பென்சில்வேனியா, விஸ்கான்ஸின், வடக்கு கரோலினா, அரிஸோனா, மிச்சிகன் போன்ற மாநிலங்களில் தற்போது பிடென் முன்னிலை வகிக்கிறார்; ஒஹையோ, அயோவா மாநிலங்களில் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார். எனினும், கருத்துக் கணிப்புகளை நுட்பமாக அலசும் திறன் படைத்தவர்கள் ஒரு எச்சரிக்கையை முன்வைக்கிறார்கள். இந்தக் கருத்துக் கணிப்புகளெல்லாம் 2016-ல் ட்ரம்பின் ஆதரவாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தே மதிப்பிட்டுவிட்டன என்றும் அந்தத் தவறைத் தற்போது சரிசெய்துவிட்டார்களா என்பதில் தெளிவில்லை என்றும் அந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள். வாக்குப் பதிவு நாளில் பிடெனுக்கு வாக்களிப்பவர்களை விட அதிக சதவீதத்தினர் கருத்துக் கணிப்பில் பிடெனுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

கடுமையான போட்டி நிலவும் மாநிலங்களிலிருந்து வரும் களநிலவரங்கள் ஒரு விஷயத்தை உணர்த்துகின்றன. இன்னும் முடிவேதும் செய்திராத வாக்காளர்கள் இந்தத் தேர்தலைப் பலவீனமான ஆட்சியாளருக்கும் நற்பண்பைக் கொண்ட ஒரு போட்டியாளருக்கும் இடையிலான தெரிவாகக் காண்கிறார்கள். எனினும், கரோனா பெருந்தொற்றுக்கு முன்பு பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தியது குடியரசுக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைதான் என்று நம்புபவர்கள் அவர்கள். போட்டியாளரோ நடுத்தர மக்களை நசுக்கும் விதத்தில் வரிகளை விதிக்கக் கூடும் என்றும் அவர்கள் அஞ்சலாம்.

இறுதிக்கட்ட மோதல்

மூன்றாவதாக, அஞ்சல்வழி வாக்குகள் பற்றி ட்ரம்ப் கிளப்பிவிட்டிருக்கும் ஆதாரமற்ற சர்ச்சையானது தேர்தல் நெருங்கிவிட்ட தருணத்தில் ஜனநாயகக் கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கக் கூடியது என்று கருதப்படுகிறது. பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய கருத்துக் கணிப்பில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் 50% நேரில் சென்றே வாக்களிக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்; பிடென் ஆதரவாளர்களில் 20% பேரே நேரில் சென்று வாக்களிப்பதாகக் கூறியிருக்கிறார்கள். அதேபோல், பிடென் ஆதரவாளர்களில் 51% பேர் அஞ்சல் வழி வாக்குகளையே தாங்கள் விரும்புவதாக அல்லது முன்கூட்டியே அஞ்சல்வழியில் வாக்களித்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். இவர்களுடன் ஒப்பிட்டால் ட்ரம்பின் ஆதரவாளர்களில் 21% பேர்தான் அஞ்சல்வழி வாக்குப் பதிவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒரு மரபுத்துவரை நியமனம் செய்யும் அவசரத்தில், குடியரசுக் கட்சியினர் இருக்கிறார்கள். அதிகார மாற்றம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடைபெறுவதற்கு ட்ரம்ப் முட்டுக்கட்டையாக இருக்கும் நேரத்தில், தேர்தலானது மாபெரும் யுத்தமாக மாறி அதன் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும் நிலையும் ஏற்படலாம்.

இரண்டு வேட்பாளர்களில் யாருக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத நிச்சயமற்ற சூழலையே இந்தக் காரணிகள் சுட்டிக்காட்டுகின்றன. 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் தவறான கணிப்புகளையே தந்தன. ஆகவே, கருத்துக் கணிப்புகள் எப்படி இருந்தாலும் இறுதிக் கட்டப் பிரச்சாரம் நடந்துகொண்டிருக்கும் இந்த முக்கியமான நாட்களில் இரண்டு வேட்பாளர்களுமே தங்களுக்குத் தாங்களே திருப்திப்பட்டுக்கொண்டிருக்க முடியாது.

-நாராயண் லட்சுமண்

தமிழில்: ஆசை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here