அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால், ஒட்டுமொத்த உலகுக்கும் சாதகமான நிலைமை காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் இன்றுகாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இலங்கைக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவின் முன்னாள் அரசாங்கத்தைவிட, தற்போது அமையவுள்ள அரசாங்கத்தால் உலகுக்கு சாதகமான நிலைமை ஏற்படும் என்றே நாம் நம்புகின்றோம்.
இதனை எமது நாடும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்காவுடன் சிறப்பான கொள்கையுடன் நாம் பயணிக்கவேண்டும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேலும் பலப்படுத்த வேண்டும். நாட்டின் இறையாண்மையைப் பாதிக்காத ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திலிருந்து எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்ளக்கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார்.