26 C
Colombo
Tuesday, May 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப் Vs பைடன்: அமெரிக்கத் தமிழர்கள் ஆதரவு யாருக்கு அதிகம்?

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இறுதிக் கட்டப் பிரசாரம் பொறி பறக்கிறது. இந்நிலையில் அமெரிக்க வாழ் தமிழர்கள், இந்தியர்களின் ஆதரவு யாருக்கு அதிகம்? ஏன்? என்று தெரிந்து கொள்ள சில அமெரிக்க வாழ் தமிழர்களிடம் உரையாடியது பிபிசி தமிழ்.

குறிப்பாக, குடியேற்றச் சட்டங்கள், குடியேறிகள் மீதான வெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியப் போட்டியாளர்களான டிரம்ப் – ஜோ பைடன் ஆகியோர் பற்றிய கருத்துகளை இவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

குடியேற்றச் சட்டங்கள் என்ற விவகாரத்தைப் பொறுத்தவரை டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே வேறுபாடுகள் உள்ளன என்று ஒப்புக்கொள்கிறார் கலிஃபோர்னியாவில் இருக்கும் இளங்கோ மெய்யப்பன்,

“அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டியே தீருவேன் என்கிறார் டொனால்டு டிரம்ப். ஆனால், ஜோ பைடன் இது தேவையில்லை என்கிறார். இரண்டாவதாக எச்1பி விசா எனப்படும் தற்காலிக வேலை அனுமதியைக் குறைக்கவேண்டும், கட்டுப்பாடுகளை இன்னும் கொண்டுவரவேண்டும். இந்த வகை விசாவைக் குறைத்தால் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்கிறார். ஆனால், தொழில் நுட்பத் துறையிலும், பொறியியல் துறையிலும் நாம் (அமெரிக்கா) முன்னேறுவதற்கு இந்த எச்1பி விசா தேவை என்கிறார். அதனால், அதனை எளிமைப்படுத்தப் போவதாக, அதிகரிக்கப் போவதாக கூறுகிறார் ஜோ பைடன்.

குழந்தைகள் – பெற்றோர் பிரிந்து வாழும் நிலை, சில இஸ்லாமிய நாடுகளில் இருந்து மக்கள் இங்கு வருவதற்கான தடை போன்ற விவகாரங்களில் இருவருக்கும் இடையில் மாறுபாடுகள் இருந்தாலும், தமிழர்கள், இந்தியர்கள் வாக்குகள் மீது இந்த வேறுபாடுகள் தாக்கம் செலுத்தாது. வெள்ளையர்கள், கருப்பர்கள், மெக்சிகோ, கியூபாவில் இருந்து குடியேறியவர்கள் மத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், தமிழர்கள், இந்தியர்களைப் பொருத்த வரை இந்தப் பிரச்சனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இதைவிட கோவிட்-19, பொருளாதாரம், வரிவிலக்கு போன்ற பிரச்சனைகளே அவர்கள் வாக்குகளைத் தீர்மானிப்பதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்பது இளங்கோ மெய்யப்பன் கருத்து.

தற்போது ஆட்சியில் உள்ள குடியரசுக் கட்சியைவிட, ஜனநாயக கட்சி சட்டவிரோதமாக குடியேறியவர்களை, குடியேற முயற்சிப்பவர்களை கையாளும் முறை மனித நேயம் சார்ந்த ஒன்றாக இருக்கும் என்பது தமது தனிப்பட்ட கருத்து என்கிறார் மேரிலேன்ட் மாநிலம் உட்ஸ்டாக் நகரில் வசிக்கும் மென்பொருள் பொறியாளரான கே.ஜி.செல்வம்.

“வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சமத்துவமின்மை, தேசிய கடன் சுமை ஆகியவற்றை கணக்கில் கொண்டு பார்த்தால், வேலைவாய்ப்பில் குடிமக்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையைத்தான் இரு கட்சிகளும் மேற்கொள்ளும் என்றே நினைக்கத் தோன்றுகிறது,” என்கிறார் செல்வம்.

குடியேறிகள் தாங்கள் வந்து குடியேறிய நாட்டின் சட்ட திட்டங்களை, வாழ்வியல் நடைமுறைகளைச் சாராமல், மற்றவர்கள் உணர்வுகளை மதிக்காமல், இந்நாட்டு மக்களுடன் கலந்து வாழாமல் இருப்பதன் விளைவே குடியேறிகள் மீதான வெறுப்பு என்கிறார் இவர். இதற்கான தீர்வும் குடியேறிகள் கையிலேயே உள்ளது என்கிறார் செல்வம். கடந்த அதிபர் தேர்தலில் ஒன்றிரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் ஹிலரி கிளிண்டன் ஒன்றிரண்டு எலக்டோரல் காலேஜ் வாக்குகளை இழந்தார் என்பது வரலாறு என்று குறிப்பிடும் இவர், பொது நலமும், தொலைநோக்கும் உள்ள சீரிய தலைமை அமைய தமிழர்கள், இந்தியர்கள் தவறாது வாக்களிக்கவேண்டும் என்கிறார்.

அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியக் குடியேறிகள் டொனால்ட் டிரம்ப்புக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள், ஜோ பைடனுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கருத்துத் தெரிவிக்கிறார் மாசாசூசெட்ஸ் மாநிலம் ஏண்டோவரில் வசிக்கும் சம்பத்குமார். கடந்த தேர்தலில் ஒரு சில சிறுபான்மை இந்தியர்கள் அதிபர் டிரம்புக்கு வாக்களித்தது தமக்கு ஆச்சரியம் என்று கூறும் இவர், அதன் பிறகு டிரம்பின் உண்மையான குணத்தை அவர்கள் (டிரம்புக்கு வாக்களித்தவர்கள்) புரிந்துகொண்டிருப்பார்கள் என்கிறார் இவர். கிறித்துவ வெள்ளையர்கள் மத்தியில் மற்ற இனத்தவர்கள் மீது, மற்ற மதத்தவர்கள் மீது, குடியேறிகள் மீது வெறுப்பை வளர்த்தவர் என்றும் அப்படிப்பட்டவர் இந்த நாட்டுக்கு அதிபராக கூடாது என்று அவர்கள் புரிந்துகொண்டதாகவும் கூறுகிறார் சம்பத்குமார்.

ஆனால், இந்தியர்கள் வாக்குகள் அப்படியெல்லாம் ஒரே பக்கம் சாயாது, பிளவுபடும் என்று கருதுகிறார் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் சோம. இளங்கோவன். “தேர்தலில் இந்தியர்கள் வாக்குகள் அவ்வளவாக பாதிக்காது. பெரும்பாலும் இந்தியர்கள் ஜோ பைடனை ஆதரித்தாலும், டிரம்பை ஆதரிக்கும் இந்துத்துவ வாதிகள், செல்வந்தர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்குகள் பிரிவதால் இந்தியர்கள் வாக்குகளால் அவ்வளவாக தாக்கம் இருக்காது” என்று கருதுகிறார் இவர்.

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வந்தால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு நல்லது என்ற கருத்தே பெரும்பாலும் இருப்பதாக கூறும் இவர், அவர்கள் வந்தாலும் அமெரிக்க வெளியுறவு, அமெரிக்க நன்மை கருதியே செயல்படுவார்கள்; இந்தியர்கள், தமிழர்கள் நலனில் இருந்தோ, மனித நேய நோக்கிலோ ஒன்றும் செய்துவிடமாட்டார்கள் என்பது மருத்துவர் சோம. இளங்கோவன் கருத்து.

இரு பக்கத்திலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்துத்துவவாதிகள் தொடர்பில் இருப்பதால் ஓரளவுக்கு அன்றி பெரிதாக எந்தக் கருத்தையும் மாற்றிவிட முடியாது என்கிறார் இவர்.

இரு கட்சிகளும் கடுமை

இரு கட்சிகளுமே குடியேற்றச் சட்டங்களைப் பொறுத்தவரை மிகவும் கடுமையாக செயல்படுவதாக கூறுகிறார் பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் மருத்துவப் பரிசோதனை நிபுணர் சுரேஷ் பரமசிவம்,

“இக்கட்சிகள் சட்டப்பூர்வமாக இங்குள்ள மக்களுக்கு சாதகமாக செயல்படுவது போல தோற்றம் அளித்தாலும், உண்மையில், குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்குவதில் முனைப்பை காட்டுகின்றன. தொடர்ந்து பல ஆண்டுகளாக வரி செலுத்தி வந்தாலும், ஏராளமான இந்தியர்கள் இங்கே பல ஆண்டுகளாக குடியுரிமைக்காக காத்திருப்பு பட்டியலில் வைக்க பட்டு உள்ளார்கள் என்பதை இதற்கு சான்றாக குறிப்பிடுகிறார் இவர்.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக இனவாதம் அதிகரித்த வண்ணம் உள்ளதை உணர முடிகிறது என்று கூறும் இவர் இதற்கு காரணம், ஆட்சியாளர்கள், மக்களிடையே இருந்த சிறு பிளவுகளை அதிகரிக்க வழிவகுத்து விட்டார்கள் என்றும், இது தடுக்கப்படவேண்டும் என்றும் கூறுகிறார்.

குடியேற்றச் சட்டங்களைப் பொறுத்தவரை, இரண்டுகட்சிகளின் நிலைப்பாடுகளும் ஏறக்குறைய ஒரேமாதிரிதான் இருக்கின்றன/இருக்கும் என்ற கருத்தையே பிரதிபலிக்கிறார் வாஷிங்டன் டி.சி.யை சேர்ந்த இராசி. சரவணபவன். “ஜனநாயக கட்சியினர் ட்ரீமர்ஸ் சட்டத்தைக் கொண்டுவருவார்கள். அதுவும் செனட் அவர்கள் கைக்குவந்தால்தான் நடக்கும். குடியரசுக்கட்சி குடியேறிகள் மீது தொடர்ந்து வெறுப்பையும், அவநம்பிக்கையையும் பரப்பிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களது அரசியல் ஆதாயம் இதில்தான் இருக்கிறது” என்கிறார் அவர்.

ஆனால், இல்லினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த சிதம்பர தாணுப் பிள்ளை வேறொரு கருத்தைக் கொண்டிருக்கிறார்.

“குடியரசு கட்சி சட்டப்படி அமெரிக்கா வருவதை வரவேற்கிறது. சட்டத்தை மீறி வருவதை சட்டப்படி வந்த இந்தியர்கள் எதிர்க்கத்தானே வேண்டும்” என்று கூறும் அவர் பாயின்ட் முறை வருவது இந்தியர்களுக்கு நல்லது என்கிறார்.

“சமுதாயத்தில் கீழே தள்ளப்பட்டு வாழும் மக்களுக்கு ஆதரவாக சில நன்மைகளை செய்து கொண்டு இருக்கும் ஜனநாயக கட்சி அணியை பாராட்ட வேண்டும். ட்ரீமர்ஸ் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி போடும் குடியரசுக் கட்சி இதயங்களை என்னவென்று சொல்வது? இதுவரை ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களுக்கு செய்து வந்த அநீதிகளை ஈடு செய்வதற்கு இரண்டு அணிகளும் எடுக்கும் புது சட்டத்திட்ட தீர்மானங்கள் மூலமாக நமது அடுத்த அமெரிக்க-இந்தியர் (தமிழ்) தலைமுறையினர் எப்படி பாதிக்கப்படுவார்கள் (ஐவி லீக் கல்லூரி இட ஒதுக்கீடு,உயர் வேலை நிமித்தம்) என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்” என்கிறார் இன்னொரு அமெரிக்கா வாழ் தமிழர் சித்தானந்தம்.

  சொர்ணம் சங்கரபாண்டி, வாஷிங்டன் டி.சி.

  பிபிசி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles