’அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்!’

0
5

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் ஒரு கூட்டுப் பொறிமுறையின்  அங்கமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

யாரும் தனித்தனியாகச் செயல்பட முடியாது என்று கூறிய ஜனாதிபதி, மக்களுக்காக அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அனைவரின் ஆதரவையும் கோரினார்.

ஹம்பந்தோட்டை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று  நடைபெற்ற ஹம்பந்தோட்டை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு விவசாயம், மீன்பிடி, சுகாதாரம், கல்வி, கிராமிய வீதி, காணி, நீர்ப்பாசனம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் வெற்றி குறித்தும் ஆராயப்பட்டது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவன மட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிஒதுக்கீடுகள், இதுவரை தொடங்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அந்த நிதியைப் பயன்படுத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கத்  திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தென் மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 574 மில்லியன் நிதி  ஒதுக்கியிருந்தாலும், அதில்  இதுவரை 23 மில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது எனவும் இது 4% முன்னேற்றம் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களின் தேவைகளுக்காக தொடர்புடைய ஒதுக்கீடுகளை முறையாகச் செலவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகள் தொடர்பான சிக்கல்களை தீர்த்தல் உள்ளிட்ட காணி பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. பல்வேறு அதிகாரத்தரப்பினருக்கும்  சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கும் காணி வழங்குவதற்குப் பதிலாக, மிகவும் பொருத்தமான மக்களுக்கும் பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும் நடவடிக்கைகளுக்கும் காணிகளை வழங்கும் கலாச்சாரம் நாட்டிற்குத் தேவை என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஹம்பாந்தோட்டை  மாவட்டத்தில் உள்ள  பாடசாலை கட்டமைப்பு குறித்து முறையான மீளாய்வு ஒன்றை மேற்கொண்டு  திட்டமொன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். அனைத்து பிள்ளைகளும் சிறந்த கல்வியைப் பெறும், மனித வளங்களை நன்கு நிர்வகிக்கும் மற்றும் வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தும் ஒரு திட்டமாக இது இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

உணர்ச்சிகள் அல்லது உள்ளுணர்வுகளின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கான முறையான தரவுக் கட்டமைப்பு தேவை என்றும், தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அதன் அடிப்படையில் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.