அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் அரசு கட்சியுடன் பேசுவதற்கு தயார் என்று
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருகின்றார். அதற்கு நிபந்தனையாக தமிழ் மக்கள் பேரவையின் தீர்வாலோசனைத் திட்டத்தை முன்வைத்திருக்கின்றார். அந்தத் தீர்வாலோசனையில் இலங்கை தமிழ் அரசு கட்சி பங்குகொள்ளவில்லை என்பது வேறுவிடயம்.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் பேசவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்திருக்கின்றார். ஆனால் இவர்கள் கவனிக்க வேண்டிய விடயம் வேறு – அதாவது, அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்களின் பிரச்னை தொடர்பில் எந்த அழுத்தங்களும் இல்லை – இருக்கப் போவதுமில்லை.
இந்தப் பின்புலத்தில், தேசிய இனப்பிரச்னை பற்றிப் பேசுவதும், அதன் எல்லை என்ன என்பதை தீர்மானிக்கும் ஏகபோக உரிமை அரசாங்கத்திற்கு மாறியிருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்பார்த்ததோ – எதிர்பார்க்கவில்லையோ அவர்கள் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையை பெற்றிருக்கின்றனர். இது இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் அரிதான ஒன்றாகும். இவ்வாறானதொரு பின்னணியில் பலமான நிலையிலிருக்கும் அரசாங்கத்தை தேவையில்லாமல் விரோதித்துக் கொள்ள எந்தவொரு வெளித்தரப்பும் முற்சிக்காது – அதேவேளை
தமிழரின் அரசியல் விவகாரம் ஏற்கனவே நீர்த்துப் போய்விட்ட ஒன்று.
இந்தியா மட்டும்தான் அரசியலமைப்பின் பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசிவருகின்றது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அங்கமாக பதின்மூன்று இருப்பதுதான் அதற்கான ஒரேயொரு காரணம். இல்லாவிட்டால் இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்னையை ஒரு விடயமாக எடுப்பதை கைவிட்டிருக்கும். ஏனெனில் ஈழத்தமிழ் மக்களை அணுகக் கூடிய அரசியல் தலைமையொன்று இல்லை.
அரசியல் ரீதியில் பலவீனமான நிலையிலிருக்கும் மக்கள் கூட்டமொன்றிற்காக, குரல்கொடுக்க எந்தவொரு வெளித்தரப்பும் முன்வராது. தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை இன்னும் சிக்கலானது. தமிழர் அரசியலின் மையம் என்று நோக்கப்பட்ட வடக்கில் கூட, தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெற்றிருக்கின்றது. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில், அரசியல்ரீதியில் இது ஒரு பிரதான வெற்றியாகும். இந்த நிலையில், சர்வதேச அரங்குகளில் தமிழ் மக்கள் இன்னும் முன்னைய நிலைப்பாட்டில் தான் இருக்கின்றனர் என்னும் அவதானமும் பெருமளவில் மாறுவதற்கான வாய்ப்பே அதிகம்.
இந்த நிலையில் அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் கட்சிகளின் குரல்கள் பெருமளவிற்கு கேட்கப்படாத ஒன்றாகவே இருக்கப் போகின்றது. முன்னரும் அரசியல் தீர்வு என்னும் விடயம் மேற்குலக ராஜதந்திரிகள் மத்தியில் பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை. தற்போதுள்ள நிலையில் அரசியல் தீர்வு என்பது அதிகம் தந்திரோபாயம் சார்ந்த ஒன்றாகவே இருக்க வேண்டும்.
பிராந்திய சக்தியின் தலையீடான, இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஒப்பீட்டடிப்படையில் தமிழ் மக்களுக்கு சாதகமான ஒன்று – அதே வேளை அதன் விளைவான
பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் இலங்கையின் அரசியலமைப்பு. அதனை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்துதான் அதிகாரப் பகிர்விற்கான கோரிக்கையை உயர்த்த முடியும். ஒரு வேளை புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டு வர அரசாங்கம் முயற்சித்தாலும் கூட, பதின்மூன்றில் இருக்கின்ற விடயங்களை இல்லாமலாக்குவதை தவிர்ப்பதற்கு தமிழர் கோரிக்கை அத்திபாரமாக இருக்கும்.
ஏனெனில், பதின்மூன்றே அதிகமென்னும் தென்னிலங்கை அரசியல் சூழலில், அதற்கப்பால் அநுர அரசாங்கம் அரசியல் அற்புதங்களை நிகழ்த்தும் – அவ்வாறான அற்புதங்களை நிகழ்த்துவற்கான அழுத்தங்களை வெளித்தரப்புக்கள் வழங்கும் என்று எவரேனும் எண்ணினால் – அவ்வாறான அரசியல்வாதிகள் நல்ல மருத்துவர்களைத்தான் நாட வேண்டும்.