லாகூரில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற ஆசிய கிண்ண பி பிரிவு கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடிய பங்களாதேஷ் 89 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இந்தப் போட்டி முடிவுடன் இலங்கையின் சுப்பர் 4 வாய்ப்பு பெரும்பாலும் உறுதியாகியுள்ள நிலையில் பங்களாதேஷ் அதன் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.
இலங்கையை மிகப் பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டால் மாத்திரமே ஆப்கானிஸ்தானுக்கு சுப்பர் 4 வாய்ப்பை பெறக்கூடியதாக இருக்கும்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 334 ஓட்டங்களைக் குவித்தது.
இந்த மொத்த எண்ணிக்கையானது இந்த வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.
ஆரம்ப வீரர் மெஹிதி ஹசன் மிராஸ், முன்வரிசை வீரர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகிய இருவரும் அபார சதங்கள் குவித்ததுடன் 3ஆவது விக்கெட்டில் 194 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணி பலமான நிலையை அடைய உதவினர்.
மொத்த எண்ணிக்கை 257 ஒட்டங்களாக இருந்தபோது துரதிர்ஷ்டவசமாக உபாதைக்குள்ளான மெஹிதி ஹசன் மிராஸ் 112 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார்.
முஜீப் உர் றஹ்மானின் பந்து மிராஸின் இடதுகையைப் பதம்பார்த்த அதேவேளை, தசைப் பிடிப்புக்கு உள்ளான மிராஸ் ஓய்வுபெற நேரிட்டது.
119 பந்துகளை எதிர்கொண்ட மிராஸ் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 112 ஓட்டங்களைப் பெற்றார்.
மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 105 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 104 ஓட்டங்களைக் குவித்தார்.
அவர்கள் இருவரைவிட மொஹமத் நய்ம் (28), முஷ்பிக்குர் ரஹிம் (25), அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் (32 ஆ.இ.) ஆகியோரும் அதிகப்பட்ச பங்களிப்பை துடுப்பாட்டத்தில் வழங்கினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 44.3 ஓவர்களில் விக்கெட்களையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இரண்டாவது ஓவரில் ரஹ்மானுல்லா குர்பாஸ் களம்விட்டகன்றதால் ஆப்கானிஸ்தான் ஆட்டம் கண்டது.
எனினும், இப்ராஹிம் ஸத்ரானும் ரஹ்மத் ஷாவும் 2ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலு சேர்த்தனர்.
ஆனால், ரஹ்மத் ஷா 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த இப்ராஹிம் ஸத்ரான் 74 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 75 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது விக்கெட் காப்பாளர் முஷ்பிக்குர் ரஹிமின் அற்புதமான பிடி மூலம் ஆட்டம் இழந்தார்.
அவர் 4ஆவது விக்கெட்டில் அணித் தலைவர ஹஷ்மத்துல்லா ஷஹிதியுடன் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
தொடர்ந்து ஷஹிதியும் நஜிபுல்லா ஸத்ரானும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது நஜிபுல்லா ஸத்ரான் 17 ஓட்டங்களுடன் வெளியேறினார். (193 – 4 விக்.)
மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஹஷ்மதுல்லா ஷஹிதி 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க அதன் பி;னனர் சீரான இடைவெளியில் குல்பாதின் நய்ப் (15), மொஹமத் நபி (3), கரிம் ஜனத் (1), முஜீப் உர் ரஹ்மான் (4), ராஷித் கான் (24) ஆட்டம் இழந்தனர்.
பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத் 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.