தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாடு எதிர்பார்த்ததை விடவும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. முடிவெடுக்க முடியாமல் தமிழ் அரசுக் கட்சி தடுமாறிக் கொண்டிருக்கின்றது. சுமந்திரன் இப்போதும் கட்சியின் முடிவைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒருவர்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார். இதுவரையில் கட்சியால் உத்தியோகபூர்வ முடிவை எடுக்க முடியவில்லை. மறுபுறம் தென்னிலங்கை வேட்பாளர்கள் – குறிப்பாக, ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவும் பொது வேட்பாளர் தொடர்பில் அச்சமடைந்திருக்கின்றனர்.
இதன் காரணமாகவே பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குத் தூது விட்டுக் கொண்டிருக்கின்றனர். முன்னர் ஓர் அழைப்பை விடுத்திருந்த ரணில் மீண்டுமொரு தூது அனுப்பினார் என்று பொதுக் கட்டமைப்பினர் மூலம் அறிய முடிகின்றது. எனினும், பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அதனை மறுத்துவிட் டன. தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு ஒப்பீட்டடிப்படையில் ஒரு முன்னேற்றகரமான வடிவமாகும். ஏனெனில், கடந்த பதினைந்து வருடங்களில் தமிழ் பொது மக்கள் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் உடன்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.
இது தமிழ்த் தேசிய அரசியலுக்கு புதிது – இன்னொருவகையில் முற்றிலும் வித்தியாசமானது. ஒன்றை ஒன்று கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் ஒன்றை ஒன்றால் மீறிச்செல்ல முடியாத ஒரு பொறியாகவே தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு இருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலுக்கு இவ்வாறான இடைக்கால அமைப்புகள் கட்டாயமானவை. அப்போதுதான் தமிழ்த் தேசிய அரசியலை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்.
தமிழ்ப் பொது வேட்பாளர் ஒரு சமரசமற்ற தமிழ்த் தேசிய நகர் வாகும் – இது ஒரு ‘டீல்’ அல்ல. ‘டீல்’ என்றால்தான், தென்பகுதி வேட்பாளர்களுடன் பேச வேண்டும். தமிழ்த் தேசிய அரசியல் எப்போதுமே ஒரு டீலாக இருக்க முடியாது. இதனை ஒரு டீல் என்று பிரசாரம் செய்தவர்கள் படுமோசமாக தோல்வியடைந்திருக்கின்றனர். அவர்கள் இப்போது தமிழ்ப் பொது வேட்பாளரின் தேவையை நிராகரிக்கப் புதிய காரணங்களைக் கண்டுபிடிக்க முற்படுகின்றனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுவது, தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு – உள்ளுக்குள் சிதறிக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் தன்னைத்தானே புடம் போடுவதற்கும் – தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதற்குமான ஓர் உபாயமாகும். ஓர் எழுச்சியை ஏற்படுத்துவதுதான் இதிலுள்ள அடிப்படை. ஒரு தேசிய இனம் நிமிர்வதற்கு முயற்சிக்கும்போது டீலுக்கு என்ன தேவையுண்டு.
அதிகாரத்துக்கான ஆசையை முன்னிறுத்தி செயல்படும் போது தான் டீல் தேவைப்படும். டீல் எப்போதுமே சுயநல அதிகார ஆசை கொண்டது. அதிகார ஆசை என்பது எப்போதுமே ஓர் இனத்தை வரலாற்றில் முன்னோக்கி நகர்த்துவதற்கு பயன்படாது. அந்த அடிப்படையில் தமிழ்ப் பொது வேட்பாளர் காலத்தின் கட்டாயம். காலத்தைத் தவறவிட்டால் கண்டவரெல்லாம் கதவைத் தட்டக் கூடும். எனவே, தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாடு ஒரு டீல் அல்ல – டீலுக்கானதும் அல்ல.