இந்தியா ஓர் ஆய்வு கூடம் – பில்கேட்ஸ்

0
31

“பல விடயங்களை முயற்சிக்கும் ஓர் ஆய்வு கூடம் இந்தியா” என்று மைக்ரோசொப்ட் நிறுவுநர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்தவை வருமாறு, “சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்ற பல கடினமான விடயங்களில் முன்னேற்றம் காணும் நாட்டுக்கு உதாரணமாக இந்தியாவைக் கூறலாம்.

இந்திய அரசு போதியளவில் வருவாய் ஈட்டி நிலைத்தன்மையுடன் உள்ளது. இதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் அங்குள்ள மக்கள் சிறந்த நிலைக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. பல விடயங்களை முயற்சிக்கும் ஆய்வு கூடமாக இந்தியாவுள்ளது. இதன் வெற்றியை இந்தியாவில் நிரூபிக்கும்போது, அந்த நடைமுறையை நாம் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம்.

வெளிநாடுகளில் இருக்கும் மைக்ரோசொப்ட் அறக்கட்டளை அலுவலங்களில், இந்தியாவில் இருக்கும் அலுவலகம் மிகப் பெரியது. உலகின் பல இடங்களில் நாங்கள் மேற்கொள்ளும் பெரும்பாலான திட்டங்கள் இந்தியாவுடன் தொடர்புடையவைதான்”- என்றார்.

இவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இந்தியர்கள் பலர் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள இந்தியர் ஒருவர், ‘‘இந்தியா சோதனைக்கூடம் தான். இந்தியர்கள்தான் பில்கேட்ஸ் போன்றோர்களுக்கு பரிசோதனை எலிகள். பில்கேட்ஸ் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள், ஊடகம் என அனைவரையும் சமாளிக்கிறார்.

இந்தியாவில் அவரது அலுவலகம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்துக்கு உட்படாமல் செயல்படுகிறது. நமது கல்விமுறை அவரை ஹீரோவாக்கியுள்ளது. நாம் எப்போது விழிப்போம் எனத் தெரியவில்லை’’ எனக் கூறியுள்ளார்.

இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள ஒருவர், ‘‘ பில்கேட்ஸ் மீதான குற்றச்சாட்டு தேவையற்றது. இந்தியாவில் பில்கேட்ஸ்க்கு எதிரான மனநிலை ஏன் என புரிந்து கொள்ள முடியவில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.