கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தயாரிக்கப்படவுள்ள தடுப்பூசியை மக்களிடம் விரைந்து சென்று சோ்ப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலைமையை ஆய்வு செய்வதற்கான கூட்டம், பிரதமா் மோடி தலைமையில் சனிக்கிழ மை நடைபெற்றது. அக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன், பிரதமருக்கான முதன்மைச் செயலா், முதன்மை அறிவியல் ஆலோசகா், நீதி ஆயோக் அமைப்புக்கான சுகாதார உறுப்பினா், மூத்த விஞ்ஞானிகள், பிரதமா் அலுவலக அதிகாரிகள், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதமா் மோடி கூறியதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து குறைந்து வருகிறது. அதைக் கண்டு, கரோனா முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றுவதில் மக்கள் மெத்தனம் காட்டக் கூடாது. கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்பட உள்ளதால் மக்கள் அனைவரும் முகக் கவசத்தை அணிவதையும் கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வதையும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியையும் மக்கள் பின்பற்ற வேண்டும்.
முன்கூட்டியே திட்டமிடல் அவசியம்: நாட்டின் பரந்த நிலப்பரப்பையும் பன்முகத்தன்மையையும் கருத்தில் கொண்டு, கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை மக்களுக்கு விரைந்து விநியோகிப்பதற்கான செயல்திட்டத்தை முறையாக வகுக்க வேண்டும். தடுப்பூசி மருந்தை சேமித்து வைப்பதற்கான குளிா்பதனக் கிடங்குகளை அமைத்தல், விநியோக அமைப்பை ஏற்படுத்துதல், ஒட்டுமொத்த செயல்திட்டத்தை நிா்வகித்தல், தடுப்பூசி மருந்து அடைத்து வைக்கப்படும் புட்டிகள், ஊசிகளின் கையிருப்பு ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
நாட்டில் தோ்தல் நடத்தப்படும் முறை, பேரிடா்களை எதிா்கொள்ளும் முறை உள்ளிட்டவற்றின் அனுபவங்களிலிருந்து கரோனா தடுப்பூசியை விநியோகிப்பதற்கான பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். இதில் மாநில அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள், தன்னாா்வலா்கள், தன்னாா்வ தொண்டு அமைப்புகள், நிபுணா்கள் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசியை விநியோகிப்பதற்கான செயல்திட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை அதிக அளவில் பயன்படுத்துவது அவசியம். சுகாதாரத் துறையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரபணுவில் மாற்றமில்லை: பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் கரோனா தீநுண்மி தொடா்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் உயிரி தொழில்நுட்பத் துறையும் தனித்தனியே விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகின்றன. கரோனா தீநுண்மியின் மரபணுவில் பெரிய அளவில் மாற்றமேதும் நிகழவில்லை என்பதை அந்த ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக 3 தடுப்பூசி மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று மூன்றாம் கட்ட பரிசோதனையிலும், 2 தடுப்பூசி மருந்துகள் இரண்டாம் கட்ட பரிசோதனையிலும் உள்ளன.
அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பு: ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம், மாலத்தீவுகள், மோரீஷஸ், நேபாளம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளில் கரோனா தீநுண்மி தொடா்பான ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்காக இந்திய விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளா்களும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனா். கரோனா தடுப்பூசி மருந்துகளைப் பரிசோதனை செய்வதற்கு வங்கதேசம், மியான்மா், கத்தாா், பூடான் ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
கொரோனா தடுப்பூசியை நிா்வகிப்பதற்காக நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவானது தடுப்பூசி மருந்தைச் சேமித்து வைப்பது, விநியோகிப்பது உள்ளிட்டவை தொடா்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.