இந்திய – இலங்கை ஒப்பந்தம்

0
34

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக புதுடில்லி செல்கின்றார். ரணில் – மோடி உரையாடல்களில் முதன்மை பெற்றிருந்த திட்டங்களின் எதிர்காலம் தொடர்பிலேயே புதுடில்லி அதிக கவனம் செலுத்தும். அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இவ்வாறானதொரு வெற்றியை பெறும் என்பதை புதுடில்லி கணித்திருக்க வாய்ப்பில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் போதும் சரி – அதன் பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போதும் சரி – தேசிய மக்கள் சக்தியின் வெற்றி தொடர்பில் பதுடில்லி மகிழ்சியுடன் கூடிய ஈடுபாட்டை காண்பித்திருக்கும் என்று கருத முடியாது. தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை இந்திய தூதரகம் மகிழ்சியுடன் நோக்கவில்லை – அதற்குப் பதிலாக, கொழும்பின் பிரதான கட்சியொன்றுடன் பேரம் பேசும் அரசியலை செய்வதுதான் தமிழ் மக்களின் நலன் களுக்கு உகந்தது என்னும் கருத்தே தூதரக வட்டாரங்களில் மேலோங்கியிருந்தது.

தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனான உரையாடல்களின் போதும் நட்புரீதியில் அவ்வாறான கருத்துக்களே முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், பின்னர் இடம்பெற்ற விடயங்களோ அனைவரது கணிப்புகளுக்கும் மாறாகவே நிகழ்ந்தது. இறுதியில் – தமிழ் மக்களின் பெரும்பான்மையானவர்களாலும் முஸ்லிம் மக்களாலும் பெரும்பான்மையாக ஆதரிக்கப்பட்ட சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தி படுமோசமான தோல்வியையே சந்தித்திருந்தது. ஒரு வேளை ரணில் – சஜித் கூட்டாக தேர்தலை எதிர்கொண்டிருந்தால், நிலைமைகள் ஒரு வேளை மாற்றமடைந்திருக்கலாம்.

ஆனால் புதுடில்லியின் கணிப்புக்களை மீறியே விடயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. தற்போதுள்ள நிலையில் அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் ஒரு பலமான அரசாங்கம் – அதற்குமப்பால் தேசிய மக்கள் சக்தி ஒரு சக்திவாய்ந்த கட்சி. அநுரகுமார திஸநாயக்க இந்தியா தொடர்பில் மிகவும் தூர நோக்குடனும் யதார்த்தமாகவும் பேசிவருகின்றார். இந்த அணுகுமுறையில் நகர்ந்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் புதுடில்லிக்குமான உறவில் சிக்கல்கள் ஏற்படப் போவதில்லை – ஆனால், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னை என்று வருகின்ற போது அநுர அரசாங்கத்தின் அணுகுமுறை எவ்வாறு அமையும் – புதுடில்லி எவ்வாறான விடயங்களை வலியுறுத்தும் என்பதே முக்கியமானது.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் தொடர்பில் கொள்கை ரீதியான எதிர்ப்பை ஜே.வி.பி. கடந்தகாலத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றது. ஒப்பந்தத்தின் விளைவான, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களையே வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில் புதிய அரசியல் யாப்பு தொடர்பிலும் அநுர அரசாங்கம் பேசிவருகின்றது. இப்படித்தான் கோட்டாபயவும் பேசினார். அவரும் 13ஆவது திருத்தத்ததை இல்லாதொழிக்கும் நோக்கிலேயே புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவர முயற்சித்தார்.

13ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பது என்பது வடக்கு, கிழக்கை வரலாற்று வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் மீதான இந்திய ஈடுபாட்டுக்கு முற்றுபுள்ளியிடுவதாகும். ஆனால் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் படி, 13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கும் முயற்சியின் போது, எவ்வாறானதொரு தீர்வு அதற்கு மாற்றாக முன்வைக்கப்படுகின்றது என்பதில் தலையீடு செய்யும் அதிகாரம் இந்தியாவுக்குண்டு, இந்திய – இலங்கை ஒப்பந்தம் அதற்கான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்குகின்றது.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்பது ஈழத்தமிழ் மக்களின் பெயரால் எக்காலத்திலும் தலையீடு செய்யும் உரிமத்தை இந்தியாவுக்கு வழங்கியிருக்கின்றது.அதனை புதுடில்லி எவ்வாறு பயன்படுத்தும்? அநுரகுமாரவின் விஜயத்தின் போது 13ஆவது திருத்தம் தொடர்பில் புதுடில்லி எவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்தும் – அதற்கு அநுரவின் பதில் எவ்வாறாக அமையும் என்பது முக்கியமானது. இந்த விடயங்களை தமிழர் தரப்புக்கள் கவனமாக உற்றுநோக்க வேண்டும்.