இந்தோனீசியா மற்றும் கிழக்கு திமோர் நாடுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
தொடர் பருவ மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும், அணைகள் நிரம்பியும் நீர் வெளியேறியதால் ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கின. கிழக்கு இந்தோனீசியாவின் ஃபுளோர்ஸ் தீவில் இருந்து கிழக்கு திமோர் வரை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள், தூக்கி வீசப்பட்ட வாகனங்கள், அடித்துச் செல்லப்பட்ட வீடுகள் என பாதிக்கப்பட்ட பகுதிகள் மிகக் கோரமாகக் காட்சியளிக்கின்றன.
வெள்ளத்தில் சிக்கிய 40-க்கும் அதிகமானோரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சேறும் தீவிரமான வானிலையும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு சவால்களாக இருப்பதாகவும் இடிபாடுகள் குவிந்திருப்பதால் உயிருடன் இருப்பவர்களைத் தேடும் பணி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மெட்ரோ தொலைக்காட்சியிடம் இந்தோனீசிய பேரிடர் நிவாரண அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராடிட்யா ஜாட்டி தெரிவித்தார்.
ஏராளமானோர் இடிபாடுகளில் புதைந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் எத்தனைபேர் காணாமல் போயிருக்கின்றனர் எனத் தெரியவில்லை என்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த மற்றொருவர் கூறினார்.
மீட்கப்பட்டவர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு உணவு, மருந்து, போர்வைகள் போன்றவை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தோனீசியாவில் இருந்து தனியாகப் பிரிந்து சென்ற நாடு கிழக்கு திமோர். இது திமோர்-லெஸ்தே என்றும் அழைக்கப்படுகிறது. தற்போதைய வெள்ளப்பெருக்கில் கிழக்கு திமோர் நாட்டில் மட்டும் 21 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் திலி அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தோனீசிய தீவுக் கூட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும் மண் சரிவும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள். கடந்த ஜனவரி மாதம் ஜாவா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தோனீசியாவில் பாதிப்பேர் நிலச்சரிவு அபாயத்துடனே எப்போதும் வாழ்ந்து வருவதாக அந்நாட்டின் பேரிடர் அமைப்பு மதிப்பிடுகிறது.