32 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

நல்லாட்சி அரசாங்கம் பதவியிழந்து சில நாட்கள் இருக்கும்.
அப்போது கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக அப்போது இருந்த சுமந்திரன் ஒரு தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் தெரிவித்தது இப்போதும் ஞாபகத்தில் இருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஐந்து ஆண்டுகளையும் முழுமையாக செலவிட்டு அவர்கள் தயாரித்த அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை – அதாவது, அவர்கள் ஐந்து ஆண்டுகள் செலவிட்டு தயாரித்த அரசமைப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தார்.
‘இப்போது கோட்டாபய ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள் தயாரித்த அரசமைப்பு வரைவை வைத்துக்கொண்டுதான் இனி புதிய அரசமைப்பு தயாரிக்கவேண்டும்’ என்றார்.
அவரின் அந்தப் பதிலில் தாங்கள் ஐந்து ஆண்டுகளை வீணடிக்கவில்லை என்ற தகவல் அதில் தொக்கி நின்றது.
ஆனால், கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும் தானும் புதிய அரசமைப்பை கொண்டுவரப்போவதாக கூறியபோதிலும், சுமந்திரன் – ஜெயம்பதி தயாரித்த அந்த நகலைக் கண்டுகொள்ளவில்லை.
அவர் அதற்காகத் தனியான குழு ஒன்றை நியமித்தார்.
அதுவும் பதின்மூன்றுகூட அதிகமானது என்ற சிந்தனை ஓட்டமுள்ளவர்களையே நியமித்தார்.
இதற்கு முன்னர், நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு, ஒவ்வொரு கட்சிகளாகத் தத்தமது யோசனைகளை சொல்லி அதனைத் தயாரிக்க எவ்வளவு செலவிடப்பட்டது என்பது தெரியவில்லை.
தனது அரசமைப்பு தீர்வு முயற்சி தோல்வியடைந்தால் அரசியலில் இருந்தே சென்றுவிடுவேன் என்று சொன்ன சுமந்திரன், அதுபற்றிக் கேட்டபோது – ‘தமது அந்த முயற்சி முடிவடையவில்லை என்றும் அந்தப் பணி அதிலிருந்து- அதாவது விட்ட இடத்திலிருந்து தொடரும்’ என்றும் நமக்கு தெம்பு தந்தார்.
ஆனால், அவரின் எதிர்பார்ப்பின்படி கோட்டாபய ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை.
அதற்கு காரணமும் உண்டு.
கோட்டாபயவை பொறுத்தவரை இனப்பிரச்னை என்ற ஒன்றே இல்லை.
பொருளாதார பிரச்னைக்கு தீர்வு கண்டுவிட்டால் இவையெல்லாம் காணாமல்போய்விடும் என்பது அவரின் நம்பிக்கை.
எனவே, அவர் ஆட்சியில் தயாரிக்கப்படும் அரசமைப்பில் இனப்பிரச்னைக்கு தீர்வு என்பதை எதிர்பார்க்க வேண்டியதில்லைத்தான்.
ஆனால், இப்போது ரணில் ஜனாதிபதி.
மகிந்த தரப்பின் ஆதரவுடன் அவர் ஆட்சியில் இருந்தாலும், தான் நினைத்தவற்றையெல்லாம் அவர்களைக்கொண்டே நிறைவேற்றி வருகின்றார்.
பொருளாதார நெருக்கடியை காரணம்காட்டி, இரட்டைப்பிரஜா உரிமை உள்ளவர்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் உரிமையை இரத்துச் செய்வதற்கே, பஸிலின் சகாக்களை- அதிகம் ஏன் அவரின் சகோதரர்களையே வாக்களிக்க வைத்தவர் ரணில்.
எனவே இன்றைய நிலையில் ரணிலால் – அதுவும் தனிஒருவனாக இருக்கின்ற அவரால் முடியுமா என்ற கேள்விக்கே இடமில்லை.
இப்போது நாம் இங்கே சொல்ல வருவது, ரணில் ஆட்சிக் காலத்தில் அதுவும் அவரின் விருப்பத்தின்பேரில் ஐந்து ஆண்டுகள் செலவிட்டு தயாரிக்கப்பட்ட அரசமைப்பு நகல் பற்றி ஏன் எவரும் பேசுவதாகத் தெரியவில்லை? அடுத்த ஆண்டுக்குள் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவேன் என்று ரணில் அறிவித்ததும் சம்பந்தனும், சுமந்திரனும் முந்திக்கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
சம்பந்தன் வழமைபோல ஒருபடி மேலேபோய், இனியும் எங்களை ஏமாற்ற நினைத்தால் பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கை வேறு விடுத்தார்.
ஆனால், ரணில் அடுத்த ஆண்டுக்குள் புதிய அரசமைப்பு என்று சொன்னது, கோட்டாபய நியமித்த குழுவினரின் அரசமைப்பை.
இதனைத்தான் நமது தலைவர் சம்பந்தன் வரவேற்று அறிக்கை விடுத்தார்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் எதிர்க்கட்சியிலிருந்த மகிந்த தரப்பு இன்று ரணிலுடன் ஆளும்தரப்பில் இருக்கின்றது.
அன்று ரணிலுடன் ஆளும் தரப்பில் இருந்த சுதந்திரக் கட்சியும், சஜித் அணியும் இன்று எதிர்க்கட்சியில் இருக்கின்றன.
தாம் தயாரித்த அரசமைப்பை அவர்களும் எதிர்க்க மாட்டார்கள் என்று நம்பலாம்.
சுமந்திரன்- ஜெயம்பதி குழுவினர் தயாரித்த வரைவு, எக்க ராஜ்ய- அதாவது ஒற்றையாட்சி என்று பெயர்கொண்டாலும் சமஷ்டிக்கான அதிகாரங்கள் இருக்கின்றன என்று விளக்கமளிக்கப்பட்ட அந்த வரைவிலிருந்து – அதாவது நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் விட்ட இடத்திலிருந்து தொடங்குவதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
இல்லையெனில் சுமந்திரன் முன்னர் சொன்னதுபோல அவரது முயற்சி அத்தோடு முடிந்துவிட்டதாக கொள்ளவேண்டியிருக்கும்.!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles