33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

இந்திய பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க வைக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சி பற்றி இப்போது தெரியவந்திருக்கிறது.
இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தின் ஊடாக மோடி – ரணில் சந்திப்புக்கு அரசாங்கம் முயற்சித்தது.
ஆனால், அது சாத்தியமாகாத நிலையில், இந்தியாவில் உள்ள தூதுவர் மிலிந்த மொறகொட ஊடாக சந்திப்புக்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டது.
அதுவும் தோல்வியடைந்தது.
பின்னர் ஜனாதிபதி தனது சகா சாகல ரத்நாயக்கவை இந்தியாவுக்கு அனுப்பி சந்திப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால், அங்கு சாகலவால் அந்நாட்டு வெளிவிவகார செயலாளரை சந்தித்து உரையாட மட்டுமே முடிந்தது.
ஆனால், அரசாங்கம் இன்னும் தனது முயற்சிகளை முடிக்கவில்லை என்பதை கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சி ஒன்று வெளிப் படுத்தியது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அந்த நாட்டின் வலிமையான நபராகவும் பிரதமர் மோடியுடன் மிக நெருக்கமாக செயல்படும் இந்திய அரசாங்கத்தின் முடிவெடுக்கும் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் வலிமையான நபராகவும் உள்ளார்.
கோட்டாபய அரசாங்கத்தின் காலத்தில் கோட்டாபயவுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றிய பிரமுகராகவும் டோவல் அறியப்படுகின்றார்.
இது தவிர, மிலிந்த மொறகொடவுடனும் டோவலுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததால் கடந்த வாரம் டோவலை சந்தித்த மிலிந்த எப்படியாவது மோடிக்கும் ரணிலுக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை விடுத்து டோவலிடம் மிலிந்த மற்றொரு கோரிக்கையை விடுத்தாராம்.
டோவலுடன் பேச கோட்டா விருப்பமாக உள்ளதாக அவர் தெரிவித்ததுடன், டோவலுக்கும் கோட்டாபயவுக்கும் இடையே தொலைபேசி உரையாடலையும் ஏற்பாடு செய்தார்.
இந்த சிநேகபூர்வ கலந்துரையாடலின்போது, டோவலிடம் அன்பான வேண்டுகோள் விடுத்து தற்போதைய ஜனாதிபதிக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
கோட்டாபயவுக்கும் டோவலுக்கும் இடையேயான இந்த தொலைபேசி அழைப்பு கடந்த வாரமே மேற்கொள்ளப்பட்டது என்றாலும், கடந்த ஜூலை மாதம் ‘கோட்டா கோ கம’ போராட்டம் உச்சத்தை எட்டியபோது கோட்டாபயவுக்கும் டோவலுக்கும் இடையே பல தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றன.
அந்த இக்கட்டான நேரத்தில், குறிப்பாக கோட்டாபயவுக்கு டோவல் பல அழைப்புகளை எடுத்திருந்தார்.
அப்போது, தான் பதவியை விட்டு விலக தயார் என டோவலிடம் தெரிவித்த கோட்டாபயவிடம் இந்தியா ஒரு கோரிக்கை முன்வைத்தது தொடர்பாக ‘ஈழநாடு’ தலைப்புச் செய்தி ஒன்றையும் முன்னர் வெளியிட்டிருந்தது.
அவர் பதவி விலகிச் செல்லும்போது, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து வெளியேற்றிவிட்டு செல்லுமாறு இந்தியா அழுத்தம் கொடுத்திருந்ததாகவும் அவ்வாறு செய்ய அவர் சம்மதம் தெரிவித்திருந்தபோதிலும் இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் காரணமாக அந்த வாக்குறுதியை கோட்டாபயவால் நிறைவேற்ற முடியவில்லை.
அதனால் இந்தியா – கோட்டா இடையிலான உறவுகள் மோசமான நிலையை அடைந்தன.
இந்தப் பின்னணியில், நீண்ட காலத்துக்குப் பின்னர் கடந்த வாரம் டோவலுடன் கோட்டாபய தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள மற்றோர் இரகசியத்தை இந்தியா தற்போது வெளியிட்டுள்ளது.
அதாவது, டோவலுக்கு கோட்டாபய வழங்கிய வாக்குறுதிகளை மீறுவதற்கு பஸில் ராஜபக்ஷவும் உடந்தையாக இருந்துள்ளார்.
அந்த வாக்குறுதியை மீறுவதற்கு பலமான செல்வாக்கு செலுத்தியவர் பஸில் என்பதை இந்தியா தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, தற்போது பஸிலுடன்கூட இந்தியா நல்ல மனநிலையில் இல்லையாம்.
எவ்வாறாயினும், டோவலுக்கும் கோட்டாபயவுக்கும் இடையிலான இந்த தொலைபேசி உரையாடலுக்கு சில நாட்களுக்கு முன்னர், கொழும்பில் மற்றுமொரு சிறப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அஜித்டோவலின் மகன் சௌர்யா டோவல் ஆரவாரமின்றி திடீரென இலங்கை வந்தார்.
அஜித் டோவலைப் போலவே, சௌர்யாவும் இந்திய பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய உறுப்பினராகக் கருதப்படுகின்றார்.
கட்சியுடனும் மோடியுடனும் நெருக்கமாகச் செயல்படும் பிரமுகராகவும் உள்ள அவர் மோடியின் முடிவுகளை எடுக்கும் ‘சிந்தனைக்குழு’வின் பிரதிநிதியாகவும் உள்ளார்.
தனக்கு மிகவும் நெருக்கமான இந்திய தொழிலதிபர் ஒருவருடன் சௌர்யா இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இலங்கை வந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இதனை அறிந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சௌர்யாவை தனிப்பட்ட சந்திப்புக்கு அழைத்து சந்தித்துள்ளார்.
ரணிலை சந்தித்த மறுநாளே சௌர்யா இந்தியா திரும்பிவிட்டார்.
இந்தப் பின்னணியிலேயே, இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புபட்ட முக்கிய அதிகாரி ஒருவர் திடீரென கடந்த சனிக்கிழமை நள்ளிரவு இலங்கை வந்திருந்தார்.
அவரின் இந்தப் பயணத்தில், ஜனாதிபதி ரணில் உட்பட சிலரை சந்தித்துவிட்டு ஞாயிறு மாலையே இந்தியா திருப்பிவிட்டார்.
அவரின் இந்த வருகையின் பின்னர் இந்தியா- ரணில் உறவில் ஏதேனும் மாற்றம் வருகின்றதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles