31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

ஒருபுறம் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாகத் தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுகின்றார்.
மறுபுறம் அவரின் பிரதிநிதியாக வடக்கு மாகாணத்தில் அமர்ந்திருக்கும் ஆளுநரோ, மாகாண சபைகளுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பிடுங்கி எடுப்பதற்கு முயன்றுகொண்டிருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது.
ஆளுநர் தனது அதிகார வரம்புக்கு அப்பால்பட்டு, சில நியதிச்சட்டங்களை தயாரித்து அதனை வர்த்தமானியில் பிரசுரித்திருப்பதை மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா பொதுவெளிக்கு கொண்டுவந்திருந்தார்.
இதனையடுத்து மாகாண சபையின் அவைத்தலைவர் சீ. வி. கே. சிவஞானம், அதுகுறித்து தெரிவித்ததுடன், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இந்த விடயம் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நேற்று முன்தினம் ஆளுநரின் பெயரில் அறிக்கை ஒன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது.
வழக்கமாக ஆளுநரின் அறிக்கைகளை, செய்திகளை ஊடகங்களுக்கு அனுப்பும் அதிகாரி ஒருவரிடமிருந்தே அந்த அறிக்கை வந்திருந்ததால் அனைத்து ஊடகங்களும் அதனை செய்தியாக்கியிருந்தன.
அவ்வாறு சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவே ஆளுநர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் இந்த அறிக்கை திங்கட்கிழமையன்று ஊடகங்களில் குறிப்பாக, இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அதேவேளையில், அமைச்சரவையின் கவனத்துக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்ததா இதனை கொண்டு வந்திருந்ததுடன், சட்டங்களை தயாரிக்கும் உரிமையை ஆளுநருக்கு யார் கொடுத்தார்கள் என்று ஜனாதிபதியும் பிரதமரும் அங்கு கேள்வி எழுப்பியதாகவும் பின்னர் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆளுநர், தனக்கு அதிகாரம் இருக்கின்றது என்று தவறுதலாக – அல்லது தெரிந்துகொண்டே இந்தக் காரியத்தை செய்தாரா என்பது தெரியவில்லை.
ஆனால், அது அல்ல நாங்கள் சொல்ல வருவது.
அவர் தனக்கு அதிகாரம் இல்லாத ஒன்றை செய்தது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாததுதான்.
அதுகுறித்து யாரும் நியாயம் கற்பிக்கமுடியாது.
அப்படிச் செய்வார்கள் என்றும் நான் நினைக்கவில்லை.
ஆனால், அவர் ஆளுநராக நியமனம் பெற்றது, கடந்த ஆண்டு ஒக்ரோபர் பதினொராம் திகதி.
அதாவது பதின்மூன்று மாதங்களுக்கு முன்னர்.
அவர் தனது பதவிக் காலத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு மாகாண சபை இயங்கிக் கொண்டிருக்கும்போது ஆளுநராக இருக்கவில்லை.
மாறாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சபை இல்லாத காலத்தில் மாகாண நிர்வாகத்தை கவனித்துக்கொண்டிருக்கின்றார்.
இந்தப் பதின்மூன்று மாதங்களிலேயே மாகாணத்துக்கு என்ன செய்யவேண்டும், அதற்காக சட்டங்களை ஆக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது.
திரும்பவும் சொல்கிறேன், அவருக்கு அதற்கான அதிகாரம் எங்கும் வழங்கப்படவில்லை.
அவர் செய்ததை அனுமதிக்க முடியாததுதான்.
ஆனால், அதனை அவர் செய்தது தவறு என்று சொல்லும் அறம் நமது அவைத் தலைவருக்கு இருக்கின்றதா? என்றும் கேட்காமல் இருக்க முடியவில்லை.
ஒரு வருடம், இரண்டு வருடமல்ல, ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சியிலிருந்த நீங்கள், உங்கள் மாகாணத்தின் நன்மை கருதி எத்தனை நியதிச்சட்டங்களை உருவாக்கினீர்கள்? இன்று ஆளுநர் சட்டவிரோதமாக சட்டங்களை எழுதுகின்றார், அதற்கு எதிராக நீதிமன்றம் போவதற்காக சட்டத்தரணிகளை நாடும் நீங்கள், உங்களுக்கு தெரியாவிட்டாலும் அந்த சட்டத்தரணிகளின் உதவியை நாடியாவது எத்தனை நியதிச் சட்டங்களை மக்களின் நன்மை கருதி உருவாக்கினீர்கள் என்ற விபரத்தை மக்கள் முன்வைக்கின்றீர்களா? மீண்டும் சொல்கிறேன், ஆளுநர் செய்தது சரியல்ல.
ஆனால், நீங்கள் செய்யாததும் சரியல்ல என்பதையாவது ஏற்றுக்கொள்ள வேண்டாமா? ஒவ்வொரு சபைக் கூட்டத்திலும் தீர்மானங்களை நிறைவேற்றுவதையே உங்கள் பணியாகக் கொண்டிருந்தீர்களே? உங்கள் சாதனை அதிக தீர்மானங்களை நிறைவேற்றிய சபை என்று பெயர் எடுத்ததுதானே? மீண்டும் தேர்தல் நடந்தாலும் அதே ஆட்களும் அதே நிர்வாகத்தையும்தானே மக்கள் காணப்போகின்றார்கள்.
பாவம் அவர்கள்.!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles