இப்படியும் நடக்கிறது…!

0
214

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.
தேர்தலை நடத்த மாட்டோம் என்று இதுவரை யாரும் சொன்னதாகத் தெரியவில்லை.
தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உரிய காலத்தில் செய்துகொண்டுதான் இருக்கின்றது.
தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும் என்று கோரி பல அரசியல் கட்சிகளின் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தலை நடத்தக்கூடாது என்று உத்தரவிடக்கோரி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் இருபத்து மூன்றாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால், இருபத்தி இரண்டாம் திகதியே தபால் மூல வாக்களிப்பு தொடங்கிவிடும்.
அநேகமாக தேர்தல் நடைபெறுவது உறுதியாகியிருக்கின்றது.
தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை இன்னமும் திறைசேரி வழங்கவில்லையே என்ற கேள்வி இருந்தாலும் தேர்தலை எப்படியும் நடத்தவிடுவது என்பதில் தேர்தல் ஆணைக்குழு தீவிரமாக இருக்கின்றது.
நடக்கவிருப்பது உள்ளூராட்சி தேர்தல்.
இந்தத் தேர்தலுக்காக களத்தில் இருக்கும் ஒவ்வொரு வேட்பாளர்களும் சில நூறு வாக்காளர்களை இலக்குவைத்தே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவிருக்கின்றனர்.
உதாரணமாக, சுமார் பத்தாயிரம் குடியிருப்புக்களை கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையில், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும், இருபத்தியெட்டு வட்டாரங்களில் இருபத்தியெட்டு வேட்பாளர்கள் போட்டியிட, மற்றுமொரு பதினேழு
வேட்பாளர்கள் பட்டியலில் போட்டியிடுகின்றனர்.
அதனை விட, அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, ஒரு வாக்காளருக்கு பதினைந்து ரூபாயை மாத்திரமே ஒரு வேட்பாளர் செலவுசெய்யமுடியும்.
சில ஆயிரம் ரூபாய்களையே ஒவ்வொரு வேட்பாளர்களும் இதற்காக செலவு செய்ய வேண்டியிருக்கும்.
ஆகக்குறைந்தது, தமது விபரங்கள் அடங்கிய சிறிய துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு அவற்றை வாக்காளர்களுக்கு விநியோகித்தாலே தேர்தல் பிரசாரத்துக்குப் போதுமானதுதான்.
ஆனால், இந்த தேர்தலில் தனது கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் நிதி உதவிக்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
‘நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய சிந்தனையும், ஆற்றலும், தூய கரங்களும் கொண்ட இளையோர்களைக் கொண்ட’ தனது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் தனது முயற்சிக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியில் அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து எதிர்வரும் தேர்தலை முற்றுமுழுதாக மக்களை நம்பி எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சில அவசியமான செலவுகளைச் செய்வதற்கான நிதி உதவிகளை முடிந்தளவு செய்துதவுமாறு தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் உள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புகின்ற அவரின் இளைய வேட்பாளர்கள், தமது தேர்தல் செலவுக்கே – அதாவது சில ஆயிரம் ரூபாய்களுக்கே அதே மக்களிடம் பகிரங்கமாகக் கையேந்தி நிற்கின்றனர் என்றால், அவர்களை எப்படி ‘ஆற்றல்’ உள்ளவர்கள் என்று விக்னேஸ்வரன் வர்ணிக்கின்றார் என்பது புரியவில்லை.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரன் இது போன்ற கோரிக்கையை விடுத்திருந்தார்.
கூடவே அந்த நிதி உதவி பற்றி பின்னர் பகிரங்கமாகக் கணக்கு விவரங்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அப்படியான கணக்கு விவரங்கள் எதுவும் பின்னர் காட்டப்பட்டதாகவும் தெரியவில்லை.
சரி, அது பாராளுமன்ற தேர்தல் என்பதால், அவர் தேர்தல் மாவட்டம் முழுவதும் சென்று அறிமுகமே இல்லாத மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யவேண்டியிருந்தது என்பதால், அதனை ஒரு நியாயத்திற்காக விட்டுவிடுவோமே.
ஆனால், தத்தமது சொந்த வட்டாரங்களில், உறவினர்கள், நண்பர்கள், ஊரவர்கள் ஆகிய நன்கு நெருங்கிப் பழகிய சில நூறு வாக்காளர்களிடம் சென்று வாக்குக் கேட்பதற்கும் – எவ்வித அறிமுகமும் இல்லாத மற்றவர்களின் கைகளை எதிர்பார்த்திருக்கும் ‘மான்’ சின்ன கட்சியின் வேட்பாளர்களும் அவர்களின் தலைவர்களும், தேர்தலின் பின்னர் தமது ‘ஆற்றலை’ எப்படி வெளிப்படுத்தப் போகின்றார்கள் என்பதை கேட்காமல் இருக்க முடியவில்லை.!

  • ஊர்க்குருவி