நேற்றைய தினம் ‘ஈழநாடு’ ஒரு விடயத்தைத் தனது ஆசிரிய தலையங்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.
தெற்கில் சிங்கள – ஆங்கில ஊடகங்கள் தமிழர் அரசியலை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து ஆசிரியர் எழுதியிருந்தார்.
வடக்கு, கிழக்கின் பிரச்னைகள் தொடர்பில் தென்னிலங்கை ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்களில் இருப்பவர்களுக்கு போதிய புரிதல் இல்லையென்னும் ஒரு பார்வையுண்டு என்பதை ‘ஈழநாடு’ வெளிப்படுத்தியிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழர்களின் அரசியலில் முக்கிய புள்ளி.
அது இப்போது இரண்டுபட்டு நிற்கின்றது.
ஆனால், அந்த முக்கிய விடயம் தொடர்பாகக்கூட தெற்கின் ஊடகங்கள் அறிந்து வைத்திருக்கவில்லை என்பதை தலையங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.
அவர்களுக்கு தமிழர் அரசியல் மாத்திரமல்ல நாட்டில் நடப்பதும் தெரிந்திருக்கின்றதா என்பதை கேட்கவேண்டியிருக்கின்றது.
அண்மையில், தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹோவா ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அரசியலில் ஆண்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது குறித்து அவர் தெரிவித்திருந்ததுடன், பெண்கள் அதிகளவில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் அவ்வாறு ஈடுபட்டால் ஊழலை தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அவரின் பார்வையில் ஆண்களே ஊழலில் ஈடுபடுகின்றார்கள் என்றும் அதுவே பெண்களாக இருந்தால் ஊழலில் ஈடுபடமாட்டார்கள் என்பதுமே அவரின் புரிதலாக
இருந்திருக்கவேண்டும்.
இதன் மூலம், தற்போது அரசியலில் உள்ள பெண்கள் ஊழல் செய்யவில்லை என்று அவர் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
அதுவல்ல நாம் இன்று சொல்ல வருவது.
தேர்தல் ஆணையாளரின் மேற்படி கூற்று தொடர்பாக கொழும்பில் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று நேற்று ஆசிரியத் தலையங்கம் எழுதியிருந்தது.
‘இலங்கை அரசியல் என்பது கட்டுக்கடங்காத ஆணவத்தால் வகைப்படுத்தப்படுகிறது.
உலகின் முதல் பெண் பிரதம மந்திரியை உருவாக்கிய பெருமையை இந்த நாடு பெற்றாலும் எல்லா வகையிலும் உள்ள ஆண்கள் தங்களுக்குள் நிறைந்து – அரசியலை ஆண்களின் பாதுகாப்பாகக் கருதுகின்றனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இந்த ‘மனிதர்களுக்கு’ சில வீட்டு உண்மைகளைக் கூறியுள்ளார்.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண்கள் அவர்களைவிட மிக உயர்ந்தவர்கள் என்பதும் இலங்கை அரசியலை தூய்மைப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழி அதில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதாகும்.
உள்ளூராட்சித் தேர்தலை சீர்குலைப்பதில் குறியாக இருக்கும் அதிகாரங்களுடன் கடுமையாக நடந்துகொள்வதற்காக தேர்தல் ஆணையத்தின் தலைவரை கடிந்துகொள்பவர்கள்கூட அரசியலில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவருடன் ஒத்துக்கொள்வார்கள்.’
இப்படிச் சொல்கின்றது அந்தத் தலையங்கம்.
ஒப்பீட்டடிப்படையில் அவர்கள் சொல்வது சரியானதாகவும் இருக்கலாம்.
அதுவல்ல, விவகாரம்.
இந்த விடயத்தை சொல்கின்ற தேர்தல் ஆணைக் குழு தலைவர் பற்றியும் அவரின் கருத்து பற்றியும் குறிப்பிடும் அந்தப் பத்திரிகை அவரின் கருத்தோடு தனக்கும்
உடன்பாடு இருக்கின்றது என்பதற்காக அவரை பாராட்டியிருக்கின்றது.
சில ஆண்கள் தங்கள் வளர்ச்சிக்கு பின்னால் பெண்கள் அதாவது தமது மனைவியரே இருக்கின்றனரென பல இடங்களில் கூறுவதைப் பார்த்திருக்கின்றோம்.
குறிப்பாக மகளிர் தின கொண்டாட்டங்களின் போது இதனை அதிகம் காணலாம்.
அது போலவே சில பெண்களும் தமது வளர்ச்சியின் பின்னால் தமது ஆண்கள் இருக்கின்றனர் எனக் கூறுவதுண்டு.
பெண்கள் அரசியலில் அதிகம் உள்வாங்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது.
அதற்காக அவர்கள் அரசியலுக்கு வந்தால் ஊழல் இருக்காது என்று கூறுவது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானது என்று ஏற்றுக்கொள்ளலாம் எனத் தெரியவில்லை.
இதுவரை அரசியலில் ஈடுபட்டுவரும் பெண்களில் பெரும்பாலானவர்களின் கணவன்மார் ஏதோ ஒரு வகையில் அவர்களின் அரசியலுடன் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.
உதாரணமாக சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சி தனது கணவரையே அவர் அமைச்சராக இருந்துபோது தனது தனிப்பட்ட செயலாளராக நியமித்திருந்தார்.
அவரே அவரின் அமைச்சில் ‘சகலதுமாக’ இருந்தார்.
அங்கே பெண் அமைச்சர் என்பதால் ஊழல் நடக்கவில்லை என்றால் அதற்கும் பெண் – ஆண் என்பதற்குமிடையே எந்தத் தொடர்பும் இருக்காது.
ஊழலை இல்லாமல் ஆக்குவதற்காக பெண்களை அரசியலில் உள்வாங்கவேண்டும் என்று சொல்லும் தேர்தல் ஆணைக்குழு தலைவரை பாராட்டும் தெற்கின் ஊடகங்கள், அதே ஆணைக்குழுவில் ஐந்து உறுப்பினர்களில் ஒரேயோர் ஆளாக இருந்த அந்த பெண் உறுப்பினர் எதற்காக பதவியிலிருந்து இராஜிநாமா செய்தார் என்பதையும் அறிந்து எழுதியிருக்கவேண்டும்.!
- ஊர்க்குருவி