26 C
Colombo
Monday, June 24, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது

கடந்த வெள்ளியன்று இந்தப் பத்தியில் வடக்கில் போதை பாவனை பற்றி யாரும் இப்போது பேசாதது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
அந்த விடயம் குறித்து அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கான போட்டியில் இருக்கும் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்திருந்த கருத்துகள் நேற்றுமுன்தினம் ஈழநாடுவில் வெளியாகியிருந்தது.
சுமார் நாற்பது ஆண்டுகளாக நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க பொலிஸார் தோல்வியடைந்துள்ளதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளதாக சொல்கிறது அந்தச் செய்தி.
‘போதைப்பொருளை ஒழிக்க முடியாமைக்கான காரணம் அதன் மூலம் கிடைக்கும் இலாபமே.
இது ஒரு வணிகமாகும்.
இதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
கஞ்சா மாத்திரைகள் இப்போது பாடசாலை மாணவர்களின் கைகளில்.
இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகளின் கடமையாகும்.
கடந்த, எண்பத்து இரண்டாம் ஆண்டில் ஹெரோயினுடன் முதல் நபர் கைது செய்யப்பட்டார்.
அவர் ஒரு சுற்றுலா வழிகாட்டி.
இன்று, ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான நகரங்கள், புறநகர் பகுதிகள், கிராமங்கள், கிராமப்புற சேவை பகுதிகளில் உள்ள பாடசாலை குழந்தைகளுக்கு போதைப்பொருள் பரவியுள்ளது.
இதை நிறுத்த இரண்டு வழிகள் உள்ளன.
ஒன்று விநியோகத்தை நிறுத்த வேண்டும்.
மற்றொன்று தேவையை நிறுத்த வேண்டும்.
அந்த விநியோக வலையமைப்பு முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்.
இதை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்தவேண்டும்’ – இதுதான் அந்த பொலிஸ் அதிகாரி சொன்னவை.
அவர் சொல்ல வருவது, இது ஒரு பாரிய இலாபமீட்டும் வர்த்தகம் என்பதால் அதனால் பயனடையும் வர்த்தகர்கள் இதனை நிறுத்தப்போவதில்லை.
அந்த விநியோக வலையமைப்பைத்தான் அழிக்கவேண்டும் – என்கிறார்.
இது தொடர்பாக வெள்ளியன்று எழுதிய அந்தப் பத்தியிலும், விநியோகத்தில் ஈடுபடும் ஒரு சிலர் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனரே தவிர, இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் மிகப்பெரிய வர்த்தகர்கள், அதாவது பல கோடி ரூபாய்களை முதலிட்டு, பல கோடி ரூபாய்களை இலாபம் பார்க்கும் ‘பெருமுதலைகள்’
கண்டுகொள்ளப்படுவதில்லையே என்ற ஆதங்கத்தையே தெரிவித்திருந்தேன்.
பொலிஸ் அதிகாரியின் கவனமும் இந்த விநியோக வலையமைப்பிலும் அதனை பாவிக்கின்ற அதாவது போதைப்பொருள்களை வாங்குகின்றவர்கள் மீதும்தான் இருக்கின்றதே தவிர, அந்த வர்த்தகர்கள் மீது அல்ல என்பதை அறியமுடிகின்றது.
சில தினங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் ஒரு சிங்கள இணையத்தளம் ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.
அவர் அடிப்படையில் ஒரு தீவிர இடதுசாரி.
அந்த விவாதத்தில் அவர் ஊழியர் சேமலாப நிதியில் அரசாங்கம் கைவைக்கவிருப்பது பற்றி தீவிரமாக தனது கண்டனத்தை பதிவுசெய்திருந்தார்.
நாடு எதிர்நோக்கும் கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அதாவது, உள்நாட்டுக் கடன்களை சரிசெய்வதற்கு ஊழியர் சேபலாப நிதியிலிருந்து அந்தக் கடன்களை அரசு அடைக்கவிருக்கின்றது என்று கூறப்படுகின்றது.
அவ்வாறு அந்த நிதியிலிருந்து கடன் மீட்புக்காக அரசு எடுப்பது முப்பத்தி ஐந்து இலட்சம் தொழிலாளர்களின் வாழ்வோடு விளையாடுகின்ற செயல் என்று நண்பர் வாதிட்டிருந்தார்.
அவரிடம் கேட்டேன், ஒவ்வோர் ஆண்டும் வரவு – செலவு திட்டத்தில் துண்டு விழும் தொகையை சரிசெய்து, ஒரு வரவு – செலவு திட்டத்தையாவது கடன் எதுவும் பெறாமல் தயாரிக்க வேண்டுமெனில் வரிகளை அதிகமாக அறிவிட வேண்டும்.
செலவுகளைக்குறைக்கவேண்டும்.
வரியை கூட்டினாலும் போராட்டம் நடக்கின்றது.
செலவைக் குறைப்பதெனில் அளவுக்கதிகமாக இருக்கும் அரச பணியாளர்களைக் குறைக்கவேண்டும்.
அதனைச்செய்தாலும் பணியாளர்கள் வீதிக்கு வந்துவிடுவார்கள்.
சரி, உள்நாட்டுக் கடனை அடைக்க ஊழியர் சேமலாப நிதியை பயன்படுத்தினால் அது எப்படி தொழிலாளர்களின் வாழ்வோடு விளையாடும்? அவர்களின் பணம் வங்கியில் இருக்கின்றது.
அவர்கள் அறுபத்தி ஐந்து வயதாகும் போது அவர்களுக்கு அது கிடைத்தால் போதுமானது தானே? இப்போது அதனை எடுக்காவிட்டால் அரசு வேறு யாரிடமாவது கடன்பெறவேண்டும்.
அதுவும் இந்த தொழிலாளர்கள் தலையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த சனங்களின் தலையில்தானே சுமத்தப்படும்? அப்பாவிபோல நான் கேட்டபோது, அவர் திருப்பிக்கேட்டார்.
நீங்களே எழுதினீர்களே இந்த போதைவஸ்து கடத்தலில் ஈடுபடும் பெரிய முதலைகளை அரசு ஏன் கண்டு கொள்வதில்லை என்று.
அதாவது பெரும் முதலாளிகள் தொடர்ந்து வரி செலுத்தாமல், சட்டவிரோதமாக சம்பாதிக்க அனுமதித்துக்கொண்டு அப்பாவிகள் மீது சுமையை போடுவது தவறானதுதானே? இதற்கு என்னிடம் பதில் இருக்கவில்லை.

  • ஊர்க்குருவி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles