28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது

நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் பற்றி நேற்றைய தினம் இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
இந்தப் பத்தியில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு என்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருந்த கருத்து ஒன்று
தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தேன்.
அதிகாலை எங்களது பத்திரிகையின் மின்பதிப்பு எமது ‘வட்ஸ்அப்’ குறுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட போது லண்டனில் நேற்று முன்தினம் இரவு பத்துமணி.
அதனால் நமது அதிகாலை நேரத்திலேயே பத்திரிகையைப் படித்துவிட்டு, நண்பரும் சமூக அக்கறை கொண்டவருமான ‘அல்லை சிறி’ ஒரு குறுந்தகவல்
அனுப்பியிருந்தார்.
‘சுரேஸின் அறிக்கைபற்றி நீங்கள் எழுதியிருந்தீர்கள்.
இரண்டாவது சுற்றிலும் 51 வீதம் எவருக்கும் கிடைக்காதென்று, இரண்டாவது சுற்றில் இருவர் மட்டும் போட்டியிடும்போது வென்றவர் 50 வீதத்துக்கு மேல்தானே
எடுத்திருப்பார்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்குமுறை உள்ளது’.
அவரது இந்த தகவல் அவருக்கு ஜனாதிபதி தேர்தல் எப்படி முடிவுகள் கணக்கிடப்படுவது என்பது தெரிந்திருக்கவில்லை என்பதை புலப்படுத்தியது.
அதைவிட முக்கியமானது, ஜனாதிபதி தேர்தலில் ஐம்பத்தியொரு வீதமான வாக்குகளை பெறவேண்டும் என்பதல்ல.
ஐம்பது வீதமான வாக்குகளைவிட ஒரு வாக்கு அதிகமானதாகப் பெற்றாலும், அவர் முதலாவது சுற்றிலேயே வெற்றிபெற்றுவிடுவார்.
அப்படி யாரும் அந்த இலக்கை அடையவில்லை என்றால் முதல் இரண்டு இடங்களையும் பெற்றுள்ள வேட்பாளர்களுக்கு இடையே போட்டி நடைபெறும்.
அவர்கள் இருவருக்கும் விழுந்த வாக்குச்சீட்டுக்களை தவிர்த்து மற்றையை வேட்பாளர்களின் வாக்குகளில் அந்த வேட்பாளரைத் தவிர்த்து முதலில் தெரிவான இரண்டு வேட்பாளர்களில் யாருக்காவது இரண்டாவது விருப்புவாக்கு விழுந்திருக்கிறதா என்று பார்க்கப்பட்டு, அவை அந்த அந்த வேட்பாளரின் வாக்குகளோடு சேர்க்கப்படும்.
உதாரணத்துக்கு முதல் இரண்டு இடங்களில் ரணிலும் சஜித்தும் வந்திருந்தால், மூன்றாவது இடத்துக்கு வந்த வேட்பாளரின் வாக்குச்சீட்டுக்களில், இரண்டாவது தெரிவாக ரணிலும் மூன்றாவது தெரிவாக சஜித்தும் இருந்தால் அந்த வாக்கு ரணிலுக்கு சேர்க்கப்படும்.
அதிலும் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே ஒருவர் எத்தனை விருப்பு வாக்குகளைப்போடலாம் என்பது
தீர்மானிக்கப்படும்.
அப்படி மூன்றுக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகள் போடப்படலாம் என்றால், அந்த வாக்குகளில் முதல் இருவரில் யாருக்கு முதலில் போடப்பட்டிருக்கின்றது என்பது பார்க்கப்பட்டு, அவர்களுக்கு சேர்க்கப்படும்.
இப்படி மற்றைய அனைவரின் வாக்குகளிலும் உள்ள விருப்பு வாக்குகள் சேர்க்கப்பட்ட பின்னரும் யாரும் ஐம்பது வீதத்திலும் அதிகம் எடுக்காவிட்டால், யார் அதி கூடிய வாக்குகளைப் பெற்றிருக்கிறாரோ அவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
இனி நாம் சொல்ல வந்த விடயத்திற்கு வருவோம்.
மேலேயுள்ள விடயங்களை நண்பருக்கு வட்ஸ்அப்பில் அழைப்பெடுத்து விளக்கிய பின்னர் அவர் கேட்டார், ‘அப்படியொரு நிலைவருகின்றபோது தமிழ் பொது
வேட்பாளர் போட்டியிடுவதால் நமக்கு என்ன பயன் ஏற்படப்போகின்றது’ என்று.
நல்ல கேள்விதான்.
நான் சொன்னேன், ‘முதலில் இந்த தேர்தலை நமது மக்கள் தமது தீர்வாக என்ன கேட்கிறார்கள் என்பதை ஒரு சர்வஜன வாக்கெடுப்பு போல நடத்திக்
காட்டாலாம்.
அந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் நாம் ஒரு சமஷ்டிக் கட்டமைப்புள்ள தீர்வு ஒன்றையே வேண்டி நிற்கிறோம் என்று முழு உலகுக்கும் மீண்டும் ஒரு
முறை அழுத்திச் சொல்லலாம்.
அடுத்தது, எங்கள் மக்களிடம் அவர்களின் விருப்புவாக்கை மற்றைய வேட்பாளர்களில் ஒருவருக்கு போடுங்கள் என்று சொல்லுவோம், அதற்காக நீங்கள் தமிழ்
மக்களுக்கு என்ன செய்வீர்கள் என்பதை இப்போதே பகிரங்கமாக சொல்லவேண்டும்.
அதாவது அதற்கான மக்கள் ஆணையை நீங்கள் சிங்கள மக்களிடமிருந்தும் பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம்.
அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்கின்ற வேட்பாளருக்கு எமது மக்களை இரண்டாவது தெரிவாக வாக்களிக்குமாறு மக்களைக் கேட்கலாம்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பதுபோல’ என்றேன்.
உதாரணத்துக்கு முதல் இரண்டு இடங்களிலும் ரணிலும் சஜித்தும் இருக்கிறார்கள் என்று வைப்போம்.
இருவருக்குமிடையே ஒரு இலட்சமோ இரண்டு இலட்சமோதான் வித்தியாசம் இருக்குமெனில் எமது விருப்பு வாக்குகள் முடிவை தீர்மானிக்கின்ற வாக்குகளாக இருக்கும் அல்லவா? இதனால்தான் நடக்க விருக்கும் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் தமிழ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்கிறோம்.!

-ஊர்க்குருவி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles