சமூகவலைதளங்களை கட்டுப்படுத்தக் கொண்டு வரப்பட்ட நிகழ்நிலை சட்டத்தை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்தச் சட்டத்தை நீக்கிவிடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் அறிவித்திருந்தார்.
அந்தச் சட்டம் கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றது என்று கூறப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.
ஆனால்,அரசாங்கம் சொல்வதுபோல, கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் மற்றையவர்களின் ‘கழுத்தை நெருக்குவதும்’ தவறானது தான்.
அண்மையில், ஒரு செய்தி தமிழ் ஊடகங்களில் வெளிவந்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தலைமையில் மீண்டும் புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சி நடைபெற்றுவருவது நாம் அறிந்ததுதான்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் பல கட்சிகளையும் கொண்ட இந்தப் புதிய கூட்டணியில் சேர்வதற்காக பல கட்சிகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றன.
சிறீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பின்னர் அது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்னதாக அதன் கூட்டணி கதிரை சின்னத்திலேயே தேர்தல்களை சந்தித்தது.
சந்திரிகா காலத்தில் இருந்த அந்தப் பழைய கூட்டணியையே இப்போது புதிதாக மீண்டும் அமைப்பதற்கு சந்திரிகா தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்.
புதியதாக உருவாகும் இந்தப் ‘பழைய கூட்டணியில்’ சுதந்திரக் கட்சிக்கு ஐம்பது வீத இடங்களையும் அதனுடன் இணையும் ஏனைய கட்சிகளுக்கு ஐம்பது வீத இடங்களையும் வழங்குவது என்ற ‘போர் முலாவோடு’ சந்திரிகா பேச்சு நடத்தி வருகிறாரென்றும் முன்னர் நீண்ட காலம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த சுசில் பிரேமஜயந்த போன்ற தலைவர்களை மீண்டும் அதனுடன் இணையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்தக் கூட்டணி மீது பலரின் பார்வையும் திரும்பியிருப்பதைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியை முளையிலேயே கிள்ளிவிட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டு செயல்படுவதாக தெற்கில் ஓர் ஊடக நண்பர் தெரிவித்தார்.
அதனால்தான் அந்தக் கட்சி தமது பத்திரிகையில் ரணில் – சந்திரிகா கூட்டு என்றும் அதில் ரணில் ஜனாதிபதி – சந்திரிகா பிரதமர் எனவும் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததாம்.
ரணிலோடு ஏற்கனவே பிரதமர் பதவி கனவில் இணைய முயல்பவர்களை குழப்புவது தான் அவர்களின் நோக்கம் என்று நினைக்கவேண்டியிருந்தது.
ஏற்கனவே, ரணில் தரப்போடு நெருக்கமாக இருக்கும் சந்திரிகா எதிர்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபட முன்வந்திருந்தாலும் பிரதமர் பதவிபோன்ற பதவி எதனையும் ஏற்பதில்லை என்பதிலும் உறுதியாக இருந்து வருகின்றார்.
அப்படி இருக்கையில் எதற்காக இப்படியொரு செய்தி ஐக்கிய மக்கள் சக்தியின்பத்திரிகையில் வெளிவந்தது என்பதை அறிய முயன்றபோதுதான் சில தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கவை பிரதான வேட்பாளராக களம் இறக்குவதற்காக அவருடன் ஐக்கிய மக்கள் சக்தியை இணைத்து வைக்கும் முயற்சியில் சில வெளி சக்திகள் தீவிரமாக முயன்று வருகின்றமை பற்றி முன்னரும் இந்தப் பத்தியில் எழுதியிருந்தோம்.
இவ்வாறு ரணில் – சஜித் இணைப்பு முயற்சி வெற்றி பெற்றால் தமது முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று நம்பும் சில ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் இந்த இணைப்பை விரும்பவில்லை என்றும் அதனாலேயே, சந்திரிகா வுக்கு பிரதமர் பதவி வழங்கப்படுமானால் ரணிலுடன் சஜித் இணைந்தாலும் அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என்று அச்சத்தை அவருக்கு ஏற்படுத்துவதன் மூலம் இந்த இணைப்பைத் தடுத்து நிறுத்தவதற்காகவே இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்திக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
- ஊர்க்குருவி.