இப்படியும் நடக்கிறது

0
72

பயனற்ற மகன் ஒருவன் தன் தந்தையின் விருப்பத்துக்கு மாறாகவே எப்போதும் செயல்பட்டு வந்தான். இதனை உணர்ந்த அவனின் தந்தை இறக்கும் தறுவாயில் படுக்கையில் இருக்கும்போது, தன் விருப்பத்துக்கு மாறாகத்தான் மகன் செயல்படுவான் என்று எண்ணி மகனிடம், ‘மகனே, நான் இறந்ததும் ஏதாவது ஓர் நீர் நிலையில் என் உடலை அடக்கம் (புதைத்து) செய்துவிடு’ என்று வேண்டிக் கொண்டான். தான் இப்படி கேட்டதால், தன்னைத் தரையில்தான் தன் மகன் புதைப்பான் என்று மனதில் நினைத் துக் கொண்டார் அந்த அப்பாவித் தந்தை.

ஆனால், அந்த உதவாக்கரை மகனோ, ‘வாழும் போதுதான் நான் என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றத் தவறிவிட்டேன். அவர் இறந்த பிறகாவது நான் அவர் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்’ என்று எண்ணி, அவர் இறந்ததும் தங்கள் சொந்த மண்ணில் ஒரு சிறிய குளத்தை உருவாக்கி அதனுள் தன் தந்தையின் பிணத்தை போட்டு விட்டான்.

இந்தக் கதைதான் அந்தச் செய்தியை அறிந்தபோது ஞாபகத் துக்கு வந்தது. எப்போதும் அண்ணனும் தம்பியும் போலவே செயல்படும் அந்த இரண்டு எம். பிக்களும் அண்மையில் ஜனாதிபதியை சந்தித் திருக்கின்றனர். இதுவரை காலமும் தமிழ் மக்கள் எதனை விரும்புகிறார்களோ அதற்கு மாறாகவே எதையாவது செய்துகொண்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த அவர்கள் இருவரும் ஜனாதி பதியை சந்தித்து விடுத்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கதுதான்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள எதிரணி தலைவர்கள் இருவருமே தமிழ் மக்களிடம் பதின்மூன்றாவது திருத்தத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனர். இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதியும் அவ்வாறே உறுதியளித்திருக்கிறார். பொலிஸ் அதிகாரம் இல்லாமல் என்று சொல்லியிருந்தா லும், அவரும் அது தொடர்பாக உறுதியளித்திருக்கிறார்.

ஆனால், எதிரணியில் உள்ள இருவரும் இனி ஆட்சிக்கு வந்தால் செய்வதாகவே தெரிவித்திருக்கின்றனர். அவ்வாறுதான் தெரிவிக்கவும் முடியும். ஆனால், தற்போது அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதியும் தமிழ் மக்களிடம் வந்து தனக்கு வாக்களித்து தன்னை பதவியில் இருத்தினால் பதின்மூன்றை அமுல்படுத்துகிறேன் என்று சொல்வது ஒரு வகையில் நகைச்சுவையானது.

அதிகாரத்தில் இருந்த இந்த இரண்டு வருடங்களில் அவர் ஏன் அதனை செய்யவில்லை என்ற கேள்வி தமிழ் மக்கள் இடத்தில் எழுவதைத் தவிர்க்க முடியாதல்லவா? அதனால், இதனை சுட்டிக்காட்டிய அந்த எம்.பிக்கள் இருவரும், ஜனாதிபதியை எஞ்சியிருக்கும் இந்த மூன்று மாதங்களுக்குள் செய்யக்கூடிய விடயங்களை செய்யுமாறும் அது ஒரு நல்லெண்ண முயற்சியாக இருக்கும் என்றும் ஜனாதிபதிக்கு எடுத்துச் சொன்னார்கள் என்று நம்பகமாகத் தெரியவருகின்றது.

ஜனாதிபதி இது தொடர்பான முயற்சிகளை எடுக்கின்றபோது எதிரணியில் உள்ள சஜித் பிரேம தாஸவோ அல்லது அநுரகுமார திஸநாயக்கவோ (அவரிடம் மூன்று எம். பிக்கள்தான் பாராளுமன்றத் தில் இருந்தாலும்கூட) அதனை எதிர்க்க முடியாதல்லவா? ஆக, ஜனாதிபதி அதற்கான முயற்சியை எடுத்தால் எதிரணியின் ஆதர வோடு ஒரு தீர்மானத்தை நிறை வேற்றியதாகவும் அது பதிவுசெய் யப்படும் அல்லவா? முதலில் மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றால், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தை பாராளுமன்றில் நிறைவேற்ற வேண்டும்.

இதேபோல, பதின்மூன்றிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் பதின்மூன்றில் சேர்ப்பதற்காக தனித்தனியான சில சட்டங்களையும் தயாரிக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே, ஒரு தன்னார்வ அமைப்பு அதற்கான சட்ட வரைவு களை தயாரித்திருந்ததோடு அதுபற்றி தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் விளக்கிக்கூறி அவர்களின் ஆதரவை கோரியிருந்தது.

சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த அந்தத் தன்னார்வ அமைப்பின் பிரதிநிதிகளை இந்த ஊர்க்குருவியும் சந்தித்து அவர்களின் முயற்சி தொடர்பாக அறிந்திருந்ததுடன், அதுபற்றி அப்போதே இந்தப் பத்தியிலும் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அரசியல் என்பது சாத்தியங்களை நடைமுறையில் சாத்தியமாக்குவது என்று ஈழநாடு அடிக்கடி தனது ஆசிரியத் தலையங்கத்தில் வலியுறுத்தி வந்திருக்கின்றது. இதுவரை சாத்தியமான எதனையும் செய்யாமல் சாத்தியமாகாத விடயங்களிலேயே காலத்தைக் கடத்திய நமது தமிழ்த் தேசிய அரசியல் வாதிகள் இப்போதாவது சரியாக சிந்திக்கத் தொடங்கியிருப்பது சற்று ஆறுதலைத் தருகின்றது.

ஆனாலும், இந்த விடயங்களை செய்தால், தமிழ் மக்களின் ஆதரவை பெறமுடியும் என்ற நம்பிக்கையை இந்த இரண்டு எம். பிக்களால் மாத்திரம் ஜனாதிபதி ரணிலுக்கு ஏற்படுத்திவிட முடியுமா என்பது தெரியவில்லை.

இந்த விடயத்தில் அனைத்துத் தமிழ் எம். பிக்களும் ஒன்றுபட்டு முயன்றால் மாத்திரமே அது சாத்தியமாவதற்கு சந்தர்ப்பம் ஏற்படலாம். இன்று இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கும்போதும் தமிழ் தரப்புகள் ஒரே கோரிக்கையை முன்வைக்கவேண்டும்.

அதைவிடுத்து வழக்கம்போல நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை பேசுவதால் யாருக்கும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிடமிருந்து பெறக்கூடியதைப் பெற்றுவிடவேண்டும் என்று இங்கே எழுதுவதற்காக யாராவது அது தமிழ் பொதுவேட்பாளருக்கு எதிரானது என்று கிளம்பிவிடாதீர் கள். அது எப்போதோ முடிந்த முடிவு. தமிழ் மக்கள் தமது வேண வாவை வெளிப்படுத்தும் முயற்சி அது.

ஊர்க்குருவி.