ஒருவர் அழகான பெண் ஒருவரை காதலித்தார். ஆனால், அவருக்கு கண்பார்வை சற்று குறைவு. இந்த சமாச்சாரம் அந்தப் பெண்ணுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆகவே அவர் கண் டாக்டரிடம் சென்று ஆலோசனை கேட்டார். ‘கண்ணுக்கு கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பெண் எப்படி என்னைக் காதலிப்பாள்? கண்ணாடி இல்லாமல் பார்த்தால், அவளுடைய முகம்கூட எனக்கு மங்கலாக – சரியாகத் தெரியவில்லையே! நான் கண்ணாடி போட்டபடி அவள் எதிரில் போகக்கூடாது. உடனே என்னை நிராகரித்து விடுவாள். என்ன செய்யலாம்?’ டாக்டர் ஆலோசனை கூறினார்: ‘ஒன்று செய்யலாமே! வெகுதொலைவு வரை உம்மால் பார்க்க முடிவது போல் நடியும். இப்படி அவள் நம்பும்படி ஏதாவது செய்து பாரும்!’. அவரும், இதை செய்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார்.
ஒருநாள் பூங்காவில் உட்கார்ந்திருந்தபோது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தூரத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு தையல் ஊசியைக் குத்திவிட்டு வந்தார். நல்ல கண்பார்வை இருந்தால்கூட அவ்வளவு தொலைவில் உள்ள ஊசியை யாராலும் பார்க்க முடியாது. அவர் ஒரு மாலை வேளையில், அந்த மரத்திலிருந்து சுமார் நூறு அடி தொலைவில் தன் காதலியுடன் உட்கார்ந்திருந்தார். திடீரென அவளிடம் ‘அதோ அந்த மரத்தில் பொறுப் பில்லாமல் யாரோ ஒரு தையல் ஊசியை குத்தி வைத்திருக்கிறார்களே!’ என்று கூறினார். அப்பெண்ணுக்கோ ஏற் கனவே அவரின் கண்பார்வை யின் மேல் சந்தேகம் வேறு இருந்தது. அப்படி இருக்க இவ்வளவு தொலைவில் ஓர் ஊசி இருப்பதை அவரால் எப்படி காண முடிந்தது என்று ஐயம் கொண்டாள். மேலும், அவளாலும் அதைப் பார்க்க முடியவில்லை. அந்த மரத்தையும்கூட சரியாக பார்க்க முடியவில்லை. ‘எனக்கு ஊசி ஒன்றும் தெரியவில்லையே’ என்று கூறினாள். அவரோ, பந்தாவாக எழுந்து, ‘நான் போய் அதை எடுத்து வருகிறேன்’ என்று கூறியபடி நடக்கலானார்.
ஒன்றிரண்டு அடி வைத்ததுமே தொப்பென்று தரையில் விழுந்தார். ஏனென்றால் எதிரில் ஓர் எருமை மாடு நின்று கொண்டிருந்தது. இது அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. அரசியல் கட்சிகளில் முக்கிய தலைவர் ஒருவர் இருப்பார். அவரைச்சுற்றி அடுத்த நிலை தலைவர்கள் மூவர் அல்லது நால்வர், ஏன் ஐவர் கூட இருக்கலாம். அவர்களுக்கு அடுத்த நிலையில் மூன்றாம் மட்டத் தலைவர்கள் இருப்பார்கள். அவர்களின் தொகை இரண்டாம் மட்டத்தலைவர்களின் தொகையில் இரு மடங்காக இருக்கும். உதாரணத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியை எடுத் துக்கொண்டால், சஜித் தலை வர். அவருக்கு மிக நெருக்க மான அடுத்த கட்டத் தலைவர் கள் என்றால், இப்போது ரஞ்சித் மத்தும பண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, எரான் விக்கிரம ரட்ண, கபீர் ஹாசிம் என்று சொல்லலாம். இப்படித்தான் அரசியல் கட்சிகளில் தலைவர்கள் இருப் பார்கள்.
விரைவில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஒரு தலைவரின் முதல் அடுக்கு தலைவர்களில் அவரும் ஒருவர். அவரை நேற்று ஒரு வைபவத் தில் சந்திக்க முடிந்தது. நண்பர் ஒருவர், என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்ததும் அவர் உடனே என்னிடம் கேட்டது: ‘வடக்கில் தமிழர் கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர் கள்?’. சொல்லவேண்டும் போலத் தான் இருந்தது. ஆனாலும், அவரோடு எதற்கு விவாதிப் பான் என்ற எண்ணத்தில் சொன்னேன்: ‘இன்னும் மக்கள் முடிவெடுத்தாக தெரிய வில்லை. சில நாட்களின் பின்னர்தான் தெளிவாக நிலைமை தெரியவரும்’ என்றேன். அவர் சொன்னார், ‘இல்லையில்லை… ரி. என். ஏ. எங்களோடுதான் இருக்கிறது’ என்று. ‘அட மடையா? இப்ப ரி. என். ஏ. என்ற ஒன்றே இல் லையே’ என்று சொல்ல வேண்டும் போலத்தான் இருந்தது.
நான் சற்று அமைதியாக நிற்க, அவர் சொன்னார்: ‘….. அவர் சொல்லிவிட்டார். இனி தமிழ் மக்கள் எங்களுக்குத் தான் வாக்களிப்பார்கள்’ என்று. அவர் சொன்ன பெயரை நாகரிகம் கருதி நான் இங்கு தரவில்லை. ஆனால், முன்னர் அமைதியாக இருந்ததுபோல இப்போதும் இருக்கமுடிய வில்லை. நான் அவருக்கு சொன்னேன்: ‘அவர் தனக்கு போடச் சொன்னாலும் தமிழ் மக்கள் அவருக்கு போடுவார்களோ தெரியவில்லை. இந்த இலட்சணத்தில் அவர் சொல்லி விட்டார் என்பதால் உங்களுக் குத்தான் தமிழ் மக்கள் போடு வார்கள் என்கிறீர்களோ?’ என்றேன். அவருக்கு எனது பதில் இரசிக்கக்கூடியதாக இல்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. ‘ரி. என். ஏ. உங்களோடு தான் என்றீர்களே, அது யார் யார்?’ என்று கேட்டேன்.
அவர் பெயர்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது தான் எனக்கு மேலேயுள்ள கதை ஞாபகத்துக்கு வந்தது. எந்த வேஷமும் நெடுநேரம் நிலைத்திருக்காது! உங்கள் வேஷத்தை மக்கள் கண்டு பிடிக்க வெகு நேரமாகாது. ஆனாலும், மரியாதைக்காக நீங்கள் வேஷம் போடுகிறீர்கள் என்று உங்களிடம் அவர்கள் சொல்வதில்லை. ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது இப்போதெல்லாம் நாகரிகமாகி விட்டது.
- ஊர்க்குருவி.