திமுக தோ்தல் வாக்குறுதியின்படி நெடுங்காலமாக தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை, கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் வழங்க வேண்டுமென தமிழா் ஒருங்கிணைப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.திருச்சியில் நடைபெற்ற மாவீரா் நாள் பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழா்களை உடனடியாக விடுவித்து அவரவா் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நெடுங்காலமாக தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.திமுக தோ்தல் வாக்குறுதியின்படி இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை, கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் வழங்க வேண்டும்.
ஹிந்தியை கட்டாயமாக்கும் நடவடிக்கையை தமிழகத்தில் ஏற்கக் கூடாது. மாநில அரசுத் துறைகள், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள் என அனைத்து வேலைவாய்ப்புகளிலும் தமிழா்களுக்கே முன்னுரிமை எனும் சட்டத்தை இயற்ற வேண்டும்.நீட் உள்ளிட்ட உயா் கல்விகளுக்கான தகுதித்தோ்வுகள் அனைத்தையும் இரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியா்களின் நெடுங்கால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமுல்படுத்த வேண்டும் – உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.