கண்டி, பல்லேகலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிராகரம் 7 விக்கெட்களால் இந்தியா வெற்றிபெற்றது.இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற ஆட்டக் கணக்கில் இப்போதைக்கு தனதாக்கிக்கொண்டது.
இன்றைய போட்டியில் இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 162 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 3 பந்துகளில் 6 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.70 நிமிட தடைக்குப் பின்னர் ஆட்டம் தொடர்ந்தபோது இந்தியாவுக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 8 ஓவர்களில் வெற்றி இலக்கு 78 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கு அமைய தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்தியா 6.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.யஷஸ்வி ஜய்ஸ்வால் 15 பந்துகளில் 30 ஓட்டங்களையும் சூரியகுமார் 12 பந்துகளில் 26 ஓட்டங்களையும் ஹார்திக் பாண்டியா 9 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் மஹஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரண ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.முதலாவது போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் சிறந்த நிலையில் இருந்த இலங்கை விசித்திரமாக சரிவடைந்தது.குசல் பெரேரா இரண்டு இணைப்பாட்டங்களில் தலா 50 ஓட்டங்களுக்கு மேல் பகிர்ந்து அணியை ஒரளவு பலமான நிலையில் இட்டார்.
பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸுடன் 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களையும் குசல் பெரேரா பகிர்ந்தார்.15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 130 பெற்று சற்ற பலமான நிலையில் இருந்த இலங்கை அடுத்த 30 பந்துகளில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 7 விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
குசல் பெரேரா 53 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 33 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹார்திக் பாண்டியா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.