இலங்கைக்கும் சீனாவிற்குமான நெருக்கம் தொடர்பில் உலகளவில் கரிசனைகள் அதிகரித்திருக்கின்றன. பொருளாதார நெருக்கடிகள் அதகரித்துவரும் சூழலில் மேலும் 500 மில்லியன் டொலர் கடனை இலங்கை பெற்றிருக்கின்றது. சீனாவின் கடன்பொறி ராஜதந்திரம் உலக அரசியலில் மிகவும் பிரபலமாக பேசப்படும் ஒன்று. சீனாவின் கடனுக்கு பின்னால் சிறிய நாடுகளை திரும்பிச் செல்ல முடியாதவாறு வளைத்துப் போடும் உள் நோக்கம் ஒழிந்திருப்பதாகவே மேற்கு ஆய்வாளர்கள் தொடச்சியாக சுட்டிக்காட்டிவருகின்றனர். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு பெற்றிருப்பது, பாரிய நிதியில் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மேற்கொண்டுவருகின்றமை போன்றவற்றின் ஊடாக ஏற்கனவே இலங்கைக்குள் வலுவாக காலூன்றியிருக்கும் சீனாவிடமிருந்து, அரசாங்கம் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றிருக்கின்றது. சீன – இலங்கை நெருக்கம் தொடர்பில் உள்நாட்டிலும் பலரும் எச்சரித்து வருகின்றனர். ஆளும் பொதுஜன பெரமுனவிற்குள்ளேயே சீனாவுடன் அதிகம் நெருங்கிச் செல்வது தொடர்பில் எச்சரிக்கை செய்வோர் இருக்கின்றனர். அண்மையில் ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச அவ்வாறானதொரு எச்சரிக்கையை செய்திருக்கின்றார். அதாவது, இலங்கை சீனாவின் காலனியாகிக் கொண்டிருக்கின்றது என்றவாறு அவர் எச்சரித்திருக்கின்றார். அதே வேளை விஜயதாச ராஜபக்ச 20வது திருத்தச்சட்டம் தொடர்பிலும் எதிர்ப்பை காண்பித்து வருகின்றார்.
கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் – அவர், ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மறுபரிசீலனை செய்வாரென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் நிகழவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமாயின் சீனாவுடன் முரண்படும் முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதற்கான தற்துனிவும் விருப்பும் கொழும்பிடம் இல்லை. ஆனால் கொழும்பு துறைமுக திட்டமும், ஹம்பாந்தோட்டையும் இந்தியாவின் நிரந்தர அச்சுறுத்தலாகவே இருக்கப் போகின்றது. சீனாவிடம் மேலும் கடன்களை பெறும் போது, இலங்கை மீதான சீனாவின் பிடி மேலும் அதிகரிக்கவே செய்யும். இலங்கை தொடர்பில் கருத்துருவாக்கங்களில் ஈடுபடும் மேற்கு அரசியல் அவதானிகளும் இலங்கை படிப்படியாக சீனாவின் பிடிக்குள் செல்வதாகவே எச்சரித்து வருகின்றனர். இந்திய ஆய்வாளர்களும் அவ்வாறானதொரு கருத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். இலங்கை தொடர்பான விடயங்களில், கடந்த 40 வருடங்களுக்கு மேலாக ஆய்வுகளை மேற்கொண்டுவரும் முன்னாள் இந்திய இராணுவ புலனாய்வு அதிகாரியும், இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் இந்திய அமைதிப்படையின் இராணுவ புலனாய்வு பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றிய, கேர்னல். ஹரிகரன், சீனா முற்றிலுமாக விழுங்குதல் (நுபெரடக) முற்றிலுமாக மூடுதல் (நுnஎநடழி) என்னும் இரண்டு தந்திரோபாயங்களின் அடிப்படையிலேயே, இலங்கையில் காலூன்றி வருவதாக எச்சரிக்கின்றார்.
இலங்கையின் முன்னணி அரசியல் சிந்தனையாளரான பேராசிரியர். தயான் ஜயதிலகவும், இலங்கை அதன் நடுநிலை வெளிவிவகாரக் கொள்கையிலிருந்து விலகிச்செல்வதாகவும், இது வெளிவிவகாரங்களை கையாளுவதில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். கோட்டபாய ராஜபக்ச தனது பதவியேற்புரையில், தாம் நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடிக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றை பொறுத்தவரையில் நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கை என்பது, பண்டாரநாயக்க வழிவந்த கொள்கையாகும். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிய பண்டாரநாயக்க, எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிற்கும் கருத்தியலுக்கும் சார்பாக நாம் இருக்கக் கூடாது – அனைவருக்கும் நண்பர்களே என்னும் அடிப்படையிலேயே இலங்கை இருக்க வேண்டும் என்னும் கொள்கையின் அடிப்படையிலேயே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். அதன் வழிவந்தவர்களே ராஜபக்சக்கள். ஆனால் அண்மைக்காலமாக சீனாவின் பிடிக்குள் இலங்கை செல்வதானது, நடுநிலை கொள்கையில் தொடர முடியுமா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கின்றது.
-ஆசிரியர்