இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் – ‘வாக்களித்தவர்களாலேயே விரட்டியடிக்கப்படுவீர்கள்’ என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எச்சரித்திருக்கிறார். சிங்கள மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் அகற்றலாம் – அவ்வாறு நிகழ்ந்தால் இலங்கை அரசியலில் அது ஆச்சரியமானதல்ல.
ஏனெனில், 69 இலட்சம் வாக்குகளை வழங்கித் தங்களின் தானைத் தலைவர் என்று கொண்டாடிய கோட்டாபய ராஜபக்ஷவை வாக்களித்த மக்கள்தான் அதிகாரத்திலிருந்து அகற்றினார்கள். கோட்டபாய மயக்கத்திலிருந்த சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதரவுடன்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரிய பெரும்பான்மை வெற்றியைப் பெற்றிருக்கின்றது.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தால் அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்பாராதவாறு நெருக்கடியை சந்தித்து கோட்டாபய ராஜபக்ஷ போன்று நெருக்கடி நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறினால் – தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நிச்சயம் வீழ்ச்சியை சந்திக்கும்தான். அதில் சந்தேகம் கொள்ள ஒன்றுமில்லை.
ஆனால், இங்கு கேட்கப்பட வேண்டிய கேள்வியோவேறு. அதாவது, இலங்கை தமிழ் அரசு கட்சி 1949இல் உருவாக்கப்பட்டது. கட்சியின் இன்னொரு பெயர் சமஷ்டி கட்சி. கடந்த 75 ஆண்டுகளாக சமஷ்டியைப் பெற்றுத் தருவதாகக்கூறி இறுதியில் இருந்ததையும் தக்கவைக்க முடியாமல் தோல்வியுற்றிருக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொய் வாக்குறுதிகள் தொடர்பில் ஈழத் தமிழினம் ஆவேசம் கொண்டு எப்போது இவர்களை விரட்டியடிப்பார்கள்? – தாங்களும் அரசியல் விழிப்புணர்வு பெற்ற மக்கள் கூட்டம்தான் – என்பதை ஈழத் தமிழர்கள் எப்போது நிரூபிப்பார்கள்? சிங்கள மக்கள் காலத்துக்குக் காலம் அதனை நிரூபித்திருக்கின்றனர் – இனியும் நிரூபிப்பார்கள் என்று நம்பலாம்.
ஆனால், நமது ஈழத் தமிழினமோ – குறிப்பாக யாழ்ப்பாண சமூகம் தங்களைப் படித்த சமூகமென்று பெருமை கொண்ட சமூகம் – சிங்களவர்களை ‘மோட்டுச் சிங்களவர்கள்’ என்று கூறி மகிழ்ந்த வரலாற்றைக் கொண்டிருக்கும் சமூகம் – இவ்வாறானதொரு சமூகத்தை எவ்வாறு தமிழ் அரசியல்வாதிகள் வெற்றிகரமாக 75 வருடங்களாக ஏமாற்றி வந்திருக்கின்றனர் – இப்போதுமே ஏமாற்றலாம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.போக முடியாத ஊருக்கு வழிசொல்வதைத் தங்களின் வித்துவமாகக் காண்பித்துக் கொண்டிருக்கும் – வாக்களிக்கும் மக்களை எல்லாக் காலத்திலும் வெற்றிகரமாக ஏமாற்ற முடியுமென்பதில் உறுதி கொண்டிருக்கும் ஈழத் தமிழ் அரசியல்வாதிகளை எப்போதுதான் ஈழத் தமிழினம் விரட்டியடிக்கும்? அந்தக் காலம் வருமா? கடந்த பதினைந்து வருடங்களாக எந்தவொரு முன்னேற்றத்தையும் காண்பிக்காத தமிழ் அரசியல்வாதிகளோ தொடர்ந்தும் கதிரையைத் தங்கள் வசம் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருகின்றனர்.
இவர்கள் உண்மையிலேயே அரசியல் நேர்மையுள்ளவர்களாக இருந்திருந்தால் தங்களின் தோல்விக்குப் பொறுப்பேற்று அரசியலை புதிய தலைமுறையிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறியிருக்க வேண்டும்.ஆனால், தங்களின் தோல்விக்கு புதிய பொய்களைக் கண்டுபிடிப்பதிலேயே கவனமாக இருக்கின்றனர்.இதற்கு என்ன காரணம்? ஒரேயொரு காரணம்தான். அதாவது, ஈழத் தமிழினம் தங்களை விரட்டியடிக்காது – அதற்கான அறிவாற்றல் அவர்களுக்கில்லை என்றே ஈழ அரசியல்வாதிகள் ஆணித்தரமாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை ஈழத் தமிழினம் கேள்விக்குள்ளாக்காத வரையில் அரசியலில் மாற்றம் என்பது முயல் கொம்புதான்.