ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்கள் நால்வருக்கு பிணை!

0
139

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய 51 பேருக்குமான விளக்கமறியலை எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் பீற்றர் போல்.

ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பான விசாரணை வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்கள் நாட்டின் பல்வேறு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளமையால் அனைவரையும் நீதிமன்றில் முற்படுத்தவில்லை. சிலர் மட்டுமே பலத்த பாதுகாப்புடன் முற்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில், காத்தான்குடியை சேர்ந்த நால்வரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும், தலா 50 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையிலும் செல்ல நீதிவான் அனுமதியளித்தார். அத்துடன், மாத இறுதி வார ஞாயிற்றுக்கிழமை காலையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சென்று கையொழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், ஏனைய 51 பேரையும் எதிர்வரும் 7ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.