30 C
Colombo
Saturday, September 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உண்மை சம்பவங்களை தழுவி தயாரான ‘கெவி’

புதுமுக நடிகர் ஆதவன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘கெவி’ எனும் திரைப்படம் தமிழகத்தின் மலை வாசஸ்தலமான கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை தழுவி தயாராகி இருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.    

அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கெவி’ எனும் திரைப்படத்தில் ஆதவன், ஷீலா ராஜ்குமார், விஜய் ரிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், ‘தர்மதுரை’ ஜீவா, விவேக் மோகன், உமர் பாரூக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலசுப்ரமணியன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஆர்ட் ஆஃப் ட்ரையாங்கிள்ஸ் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இடம்பெறும் பாடல் ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் படத்தைப் பற்றிய புது தகவல்கள் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

படத்தைப் பற்றி நாயகன் ஆதவன் பேசுகையில், ” நடிகராக வேண்டும் என்பது எம்முடைய சிறு வயது கனவு . அதற்காக கடினமாக உழைத்து நண்பர்களுடன் இணைந்து குறும்படம் ஒன்றை உருவாக்கினேன். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததும், முழு நீள திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் உருவானது. கடும் முயற்சிகளுக்குப் பிறகு ‘கெவி’ திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டேன். இதற்காக நண்பர்களுடன் விவாதம் நடத்தி கதையை உருவாக்கி, அதனை படமாக்குவதற்காக படப்பிடிப்பு தளத்தை தேடி பயணித்தோம். இந்நிலையில் கொடைக்கானல் அருகே ‘வெள்ளக்கெவி’ என்ற ஒரு பெயரில் அசலான நிலவியல் பகுதி இருந்தது. எங்களின் கதை அப்பகுதியில் நடைபெற்ற நிஜ சம்பவத்தை தழுவியதாக இருந்தது. அதனால் படத்திற்கு ‘கெவி’ என்றே பெயரிட்டோம். அதன் பிறகு அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி படப்பிடிப்பை தொடங்கினோம். 

கெவி எனும் மலை கிராமத்தில் வசிக்கும் எந்த பிரச்சனைக்கும் போகாத ஒரு இளைஞன். அந்த இளைஞனால் கிராமத்திற்கு ஒரு பிரச்சனை வருகிறது. அதனை அவன் எப்படி சமாளித்தான்? என்பதுதான் இப்படத்தின் கதை. 

இந்த திரைப்படத்திற்காக ஆறு ஆண்டுகள் தலை முடியை வளர்த்துக் கொண்டேன். மேலும் இந்த படத்தில் 20 நிமிடங்களுக்குப் பிறகு ஒரே ஒரு ஆடையுடன் தான் படம் முழுவதும் பயணிப்பேன். படபிடிப்பின் போது இது எனக்கு கடினமானதாக இருந்தது. இருப்பினும் எம்முடன் நடித்த சக கலைஞர்கள் அனைவரும் கஷ்டப்பட்டு நடித்த போது எம்முடைய கஷ்டம் மறந்து போனது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது”என்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles