நாளை மறுதினம் இலங்கைத் தீவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல் முடிவுற்றிருக்கும். வெளிவரவுள்ள பெறுபேறுகள் இலங்கைத் தீவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டவையாக இருக்கும். தேர்தல் வெற்றியானது, ஒன்றில் இலங்கையை உயர்த்தும் அல்லது இலங்கையை நிர்மூலமாக்கும். இந்தத் தேர்தல் தொடர்பில் வெளித் தரப்புகள் எவ்வாறான ஆர்வத்தைக் கொண்டிருக்கின்றன என்பதிலும் தெளிவான நிலைபபாட்டைக் காண முடியவில்லை.
இந்தியா யாரை ஆதரிக்கின்றது என்பது தொடர்பில் ஊகங்கள் நிலவினாலும்கூட அது தொடர்பில் தெளிவான முடிவுக்கு வரமுடியாது. ஏனெனில், எவர் வெல்வார் என்பதைக் கணிக்க முடியாதபோது இந்தியா அவதானமாகவே நடந்து கொள்ளும். ரணில் விக்கிரமசிங்கவை மேற்குலகம் விரும்பினாலும்கூட மக்களை வாக்களிக்கச் செய்வதில் எந்தவொரு வெளித்தரப்பும் மாயாஜாலங்களை புரியமுடியாது. இந்தப் பின்புலத்தில் ஜனதிபதித் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும், வெல்பவருடன் பணியாற்றுதல் என்னும் அடிப்படையில்தான் இந்தியா மற்றும் அமெரிக்கா நாட்டம் கொண்டிருக்கும்.
ஏனெனில், ஒருவரை ஆதரிக்கப் போய் அவர் ஒருவேளை தோல்வியடைந்தால் அதன் பின்னர் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். அதேபோன்று தோல்வியடைபவரும் பலமான நிலையில் பாராளுமன்றத்தில் இருப்பாராயின், அதன் பின்னர் இந்திய – அமெரிக்க நலன்களை முன்னெடுப்பதில் பல சோதனைகளை சந்திக்க நேரிடும். மொத்தத்தில், ஜனாதிபதித் தேர்தல் புதிர்கள் நிறைந்த ஒரு தேர்தலாகவே இருக்கப் போகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும்? பாதிப்பதற்கான வாய்ப்பிருக்கின்றதா? நிச்சயமாக இல்லை. ஏனெனில், இதில் எவர் அதிகாரத்துக்கு வந்தாலும்கூட தமிழ் மக்க ளின் அரசியல் எதிர்காலம் எப்போதும்போல்தான் நகரப் போகின்றது. எந்தவோர் அதிசயமும் நடந்துவிடாது.
அதேவேளை, எந்தவோர் அதிசயத்தையும் வரப்போகும் ஜனாதிபதியால் நிகழ்த்திவிடவும் முடியாது. ஏனெனில், வெற்றி பெறப் போகிறவர் மைத்திரிபால சிறிசேன நிலையில்தான் இருப்பார். 2015இல் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றபோது சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவை மகிந்த ராஜபக்ஷவே பெற்றிருந்தார். இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேனவால் எதனையும் செய்ய முடியவில்லை. ஏனெனில், அனைத்தையும் குழப்புவதற்கான சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவை மகிந்த பெற்றிருந்தார்.
அவ்வாறானதொரு நிலைமைதான் தற்போதும் தெரிகின்றது. ஒருவேளை சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றாலும்கூட பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவை அவர் பெற்றிருக்கமாட்டார். அநுரகுமார திஸநாயக்க சிங்கள பெரும் பான்மையை பெற்று தோல்வியடைந்தாலும் கூட அநுரகுமார திஸநாயக்கவே தென்பகுதியைத் தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டவராக இருப்பார். இந்த நிலையில் சஜித் பிரேமதாஸ எதனையும் செய்யாது வழமைபோல் கதைகள் சொல்லும் ஜனாதிபதியாகவே இருப்பார். தமிழ் மக்களின் நிலைமை வழமைபோல் இலவுகாத்த கிளியாகவே முற்றுப்பெறும். இந்த நிலைமையிலிருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது என்று மட்டும்தான் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.