நீண்ட காலத்திற்கு பின்னர் தமிழ் தேசியவாத அரசியல் பின்புலத்தில் இயங்கும் கட்சிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பலவும் தோல்விடைந்திருகின்ற நிலையில், வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் இந்த முயற்சியை
மேற்கொண்டிருக்கின்றது.
மக்கள் முறைப்பாட்டுக்கான குழு எனப்படும் – சிவில் சமூக குழுவானது – அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் – ஆகக் குறைந்தது, தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி சில விடயங்களில் பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்னும் கோரிக்கை முன்வைத்திருந்தது.
நீண்ட காலத்திற்கு பின்னர் பிரதான கட்சிகள் அனைத்தும் இந்த சந்திப்பில் பங்குகொண்டிருந்தன.
இந்த ஒற்றுமை முயற்சியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பங்குகொள்ளவில்லை.
தமிழ் கட்சிகளிடையே எவ்வகையான ஐக்கியம் தேவை என்னும் விவாதங்கள் ஏராளமாக நடந்திருக்கின்றது.
கொள்கை அடிப்படையிலா அல்லது தந்திரோபாய அடிப்படையிலான ஐக்கியமா சாத்தியம் – என்றவாறான விவாதங்கள் தமிழ்ச் சூழலில் உண்டு.
ஆனால் கொள்கையடிப்படையிலான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை – மாறாக சில இடங்களில் தந்திரோபாய அடிப்படையிலான ஐக்கிய முயற்சிகள்
வெற்றியளித்திருக்கின்றன.
இந்த பின்புலத்தில் முதலில் தந்திரோபாய ஐக்கியமே சாத்தியமானது.
அவ்வாறு தந்திரோபாய அடிப்படையில் ஏற்படுத்தப்படும் அரசியல் கூட்டை, பின்னர் கொள்கை அடிப்படையிலான பரந்த கூட்டணியாக ஆக்கிக்கொள்ள முடியும்.
இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் பெரியளவிலான பின்னடைவுகளை சந்தித்திருந்தது.
இந்த அனுபவம் எதனை உணர்த்துகின்றது? கட்சிகள் தொடர்ந்தும் பிரிந்து சென்று தேர்தலை எதிர்கொள்வதா அல்லது சூழ்நிலையை கருத்தில் கொண்டு
தந்திரேபாயமாக ஓரணியாவதா? எது சரியான உபாயமாக இருக்க முடியும்? தற்போதுள்ள நிலையில் தமிழ் மக்களின் ஜனநாயக பிரதிநித்துவம்
ஒன்றுதான் தமிழ்மக்களின் ஒரேயொரு பலமாக இருக்கின்றது.
ஆனால் தமிழ் தேசிய கட்சிகள் சில தந்திரோபாயமான தீர்மானங்களை எடுக்காவிட்டால், அந்த நிலையும் கேள்விக்குள்ளாகும்.
தமிழ் தேசிய அரசியலை ஒரு திரட்சியாக பேணிப் பாதுகாக்க வேண்டுமென்றால், வடக்கு கிழக்கின் அனைத்து தமிழ் பிரதிநிதித்துவங்களும் முடியுமான வரையில் தமிழ் தேசிய கட்சிகளின் வசமாக வேண்டும்.
அது ஒன்றின் மூலம் தான் குறிப்பிட்டளவாவது பேரம் பேசும் பலத்தை ஒருங்கிணைக்கலாம்.
பிரதிநிதித்துவம் சிதறுமாக இருந்தால், அதன் பின்னர் தேசத்தை கட்டியெழுப்பும் அடிப்படையிலான விவாதங்கள் பயனற்றது.
தமிழ் மக்கள் மத்தியில் வீழ்சியுற்றுச் செல்லும் நம்பிக்கையை மீளவும் புத்துயிர் பெறச் செய்வதிலும் இவ்வாறான ஐக்கியம் பெரியளவில் செல்வாக்குச் செலுத்தும்.
கடந்த காலத்தில் கூட்டமைப்பை மக்கள் பெரியளவில் ஆதரித்தமைக்கு பின்னால், அது ஒரு கூட்டாக இயங்குகின்றது என்னும் மக்கள் உளவியலும் செல்வாக்குச் செலுத்தியது.
கூட்டமைப்பிற்குள் நிலவிய உள் முரண்பாடுகள் தீவிரமடைந்து சென்றதும், அதன் மீது பொதுவெளிகளில் விமர்சனங்கள் அதிகரித்தமையும் அதன் வீழ்ச்சியில் பிரதானமாக செல்வாக்குச் செலுத்தியது.
இந்த நிலையில் மீண்டும் தமிழ் தேசிய கட்சிகள் ஐக்கியமடைந்து, ஒரு பொது இணக்கப்பாட்டிற்குள் வந்த செய்தி மக்கள் மத்தியில் செல்லுமாயின்,
மக்கள் மீளவும் உணர்வுகள் ஒருமிக்கும்.
அது தேர்தல் வெற்றியை பன்மடங்காக்கும்.
ஐக்கியப்பட்ட தேர்தல் வெற்றிதான், பல்வேறு வழிகளிலும் ஒரு ஐக்கிய முன்னணியை உடனடியாக தாங்கிநிற்கும்.
கொள்கை அடிப்படையில் அவ்வாறான நகர்வை செய்வது கடினமானது.