ஒரு மீற்றருக்கு மேல் கொரோனா வைரஸ் பயணிக்காது எனக்கூற முடியாது-GMOA

0
303

ஒரு மீற்றருக்கு மேல் கொரோனா வைரஸ் பயணிக்காது என்று கூறமுடியாது. எனவே ஒரு மீற்றர் இடைவெளி என்பதை விட முடிந்தளவு ஒரு மீற்றர் அல்லது அதனை விட கூடிய இடைவெளியைப் பேண வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை அண்மையில் வீடுகளிலேயே இறந்த சிலருக்கு முதலாவது பரிசோதனையில் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவும் உயிரிழந்ததன் பின்னர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்ற முடிவும் கிடைத்துள்ளது.
இவ்வாறான நிலைமை தொடருமானால் தற்போது தொற்றாளர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாம் மரணங்களைப் பற்றிப் பேச வேண்டியேற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் போன்றே மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்த போக்கை காண்பிக்கிறது. இவ்வாறான நிலையில் அவதானம் மிக்க பகுதிகளை அடையாளப்படுத்தாவிட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

357 மருத்துவ சுகாதாரப் பிரிவுகளில் 60 இற்கும் குறைவான பகுதிகளிலேயே அதிக கூடிய அவதானமுடைய பகுதிகள் காணப்படுகின்றன. எனவே கட்டுப்படுத்தக் கூடிய மட்டத்திலேயே நிலைமை காணப்படுகிறது. அண்மையில் வீடுகளிலேயே இறந்த சிலருக்கு முதலாவது பரிசோதனையில் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவும் உயிரிழந்ததன் பின்னர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்ற முடிவும் கிடைத்துள்ளது.

இவ்வாறான நிலைமை தொடருமானால் தற்போது தொற்றாளர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாம் மரணங்களைப் பற்றிப் பேச வேண்டியேற்படும். இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு சமூகத்திலிருந்து வைரஸ் தொற்று ஏற்படவில்லை. மாறாக வீட்டுக்குள் வைரஸ் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள், பொருளாதார மத்திய நிலையங்கள், ஆடைத் தொழில்சாலைகள் என்பனவற்றில் வைரஸ் பரவ வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன.
பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

எனினும் அது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். பி.சி.ஆர். பரிசோதனையை விட செலவு குறைந்த முறையில் துரிதமாக முன்னெடுக்கப்படும் பரிசோதனைக்கு இலங்கை மாற வேண்டும். அத்தோடு மீண்டும் மீண்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒரு மீற்றருக்கு மேல் வைரஸ் பயணிக்காது என்று கூற முடியாது. எனவே ஒரு மீற்றர் இடைவெளி என்பதை விட முடிந்தளவு ஒரு மீற்றர் அல்லது அதனை விட கூடிய இடைவெளியைப் பேண அறிவுறுத்துகின்றோம் என அவர் தெரிவித்தார்.