ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு கட்சிகளுக்கு அப்பால்பட்டது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாதிநிதி ஜெய்சங்கர் ஒருமுறை இந்திய பாராளுமன்றத்தில் இதனை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். ‘நாங்கள் கடைப்பிடிக்கும் நிலைப்பாடானது ஏற்கனவேயிருந்த அனைத்து அரசாங்கங்களினதும் நிலைப்பாடாகும்’, என்று அவர் கூறியிருந்தார்.
இலங்கைக்கு வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்திய உயர் மட்டத்தினர் இந்த விடயத்தை வலியுறுத்தத் தவறியதில்லை. ஆனால், இந்தியாவை தமிழர் தரப்புகளால்தான் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தியா, ஈழத் தமிழர் பிரச்னையில் நேரடியாகத் தலையீடு செய்யும் முடிவை எடுத்து, ஈழ ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சியளித்த காலத்திலிருந்து ஒரு விடயத்தைத் தெளிவாக வலியுறுத்தியிருந்தது.அதாவது, இலங்கையை பிளவுபடுத்தும் நோக்கில் இந்தியா எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ளாது.
அதாவது, தனிநாட்டு கோரிக்கையை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது. அதுமட்டுமல்ல அதனை அனுமதிக்கவும் மாட்டாது. இதன் பொருள் என்ன? ஈழ ஆயுத அமைப்புகள் எவையேனும் இந்தியாவைமீறி, தனிநாட்டை அடைய முற்பட்டால் அதனை இந்தியா அனுமதிக்காது. அப்போது, இலங்கைக்கான விசேட தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த பார்த்தசாரதி அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் இந்தியாவின் நிலைப்பாட்டை நேர்மையாகத் தெரியப்படுத்தியிருந்தார்.
உண்மையில், இந்தியா இது விடயத்தில் இரகசியமாக செயல்பட்டிருக்கவில்லை. இப்போதும் சிலர் இதற்கு சாட்சியாக இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்துதான் விடுதலைப் புலிகள் தவிர்ந்த இயக்கங்கள் தனிநாட்டை அடையலாம் என்னும் தங்களின் இலக்கு தொடர்பில் சந்தேகிக்கத் தொடங்கினர். இந்தியாவை விரோதித்துக் கொண்டு அதனை அடைய முடியாது என்னும் முடிவுக்கு வந்தனர். அவ்வாறு கருதிய இயக்கங்களே ஜனநாயக நீரோட்டத்தை தழுவிக் கொண்டன.
அன்றைய சூழலில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டதன் ஊடாக மாகாண சபை முறைமையை சாத்தியப்படுத்தியது. அன்றிலிருந்து இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு மாகாண சபை முறைமைதான். அதிலுள்ள குறைபாடுகளை அனைவரும் அறிவர். குறிப்பாக மாகாண சபை முறைமையும் ஒற்றையாட்சி கட்டமைப்பும் ஒன்றையொன்று சமவலுவில் சார்ந்திருக்கவில்லை என்பதுதான் அடிப் படையான பிரச்னையாகும். ஆனால், அவ்வாறானதொரு முறைமைதான் இந்தியாவில் இருக்கிறது.
தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாகாண ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திக்கு உண்டு. கருணாநிதி தலைமையிலான அரசாங்கம் ஒருமுறை அவ்வாறு கலைக்கப்பட்டும் இருக்கிறது. ஆனால், இங்கு கவனிக்கவேண்டிய விடயம் ஒன்று உண்டு – அது தான் முக்கியமானது. அதாவது, தனது நாட்டில் நடைமுறையிலுள்ள ஓர் அதிகாரப் பகிர்வு முறைமையையே இலங்கை இன முரண்பாட்டுக்கான தீர்வாக இந்தியா அறிமுகம் செய்தது. ஆனால், அன்றைய சூழலில் அனைத்துத் தரப்புகளும் விடயத்தில் ஒன்றுபட்டு – ஒற்றுமையாக அரசியலை கையாள்வதில் தவறிழைத்தமையின் காரணமாக மாகாண சபை முறைமையை சரியான திசை நோக்கி முன்னகர்த்துவதில் இந்தியாவின் பங்கு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. பிரேமதாஸ – புலிகள் உடன்பாடு இந்தியாவின் தலையீட்டை தவிடுபொடியாக்கியது.
இன்று இந்தியாவுக்கு பொறுப்பு உண்டு என்று தமிழர் தரப்புகள் கூற முற்படும்போது நினைவுக்குக் கொண்டுவர வேண்டிய முக்கிய விடயங்கள் இவைதான். ஒற்றையாட்சியை நீக்குவதற்கான நிலைப்பாட்டில் சரி அல்லது தவறு என்பது இங்கு விடயமல்ல. மாறாக, அதனை இந்தியாவால் எக்காலத்திலும் ஆதரிக்க முடியாது என்பதுதான் அடிப்படையானது. ஒருவேளை, இலங்கையின் ஆட்சியாளர்கள் கட்சிகளை கடந்து அவ்வாறானதொரு முறைமையை நடைமுறைப்படுத்த இணங்கினால் அப்போது, இந்தியாவும் அதற்கு நட்புக்கரம் நீட்டமுடியும். ஆனால், கொழும்பை அச்சுறுத்தி ஒற்றையாட்சியை நீக்கும் விடயம் ஒருபோதும் நடைபெறப் போவதில்லை. அவ்வாறானதோர் அரசியல் தேவைப்பாடு இன்றைய சூழலில் இல்லை.