கட்டான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – வைத்திய சிகிச்சையிலிருந்த சந்தேகநபர் கைது

0
7

கட்டானையில் மோதலின்போது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேகநபரான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கட்டான பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருதரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதன் விளைவாக, அங்கிருந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உரிமம் பெற்ற அவரது துப்பாக்கியினால் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தார்.

குறித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கும், மற்றொரு நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், மற்றைய நபர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.இதனையடுத்து, குறித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தமது உரிமம் பெற்ற துப்பாக்கியால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த கட்டானையைச் சேர்ந்த 36 வயதுடைய குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டை நடத்திய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.