கணேமுல்லே சஞ்சீவ கொலை தொடர்பாக புத்தளம், பாலாவிய பகுதியில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல பெயர்களில் தோன்றி பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், புத்திக மனதுங்க தெரிவித்தார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து பல அடையாள அட்டைகளும், ஒரு சட்டத்தரணிக்கான அடையாள அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சந்தேக நபர் மொஹமட் அஸ்லான் ஷெரிப்தீன், தான் தயாரித்த சட்டத்தரணி அடையாள அட்டையில் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தனாரச்சி மற்றும் கொடிகாரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க என்ற பெயர்களைப் பயன்படுத்தியதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பொய்யாகச் சட்டத்தரணி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இந்தக் கொலைக்கு உதவியதாகச் சந்தேகிக்கப்படும் பெண்குறித்துப் பல உண்மைகள் தற்போது வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும், அவரையும் உடனடியாகக் கைது செய்ய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பு குற்றப்பிரிவுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.