செனல் 4 காணொளி விவகாரம் என்பது, தமிழீழ விடுதலை புலிகள், பிரிவினைவாதிகளின் சூழ்ச்சியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் காங்கிரஸ் இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியாலளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் வெளிநாடுகளால் வெளியிடப்படும் காணொளிகளை வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களிடம் முதலில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் விடயத்தில் அரசியல் அனுகூலத்தை பெற்றுக்கொள்வதை ஒருபுறம் வைத்துவிட்டு உண்மை என்ன என்பது தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செனல் 4வினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட காணொளியில் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தில் இருக்கும் இரு அமைச்சர்கள் ஆரம்பத்திலேயே கூறிவிட்டனர்.
ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோரே இந்த விடயங்களை நாடாளுமன்றத்தில் ஆரம்பத்திலேயே கூறிய தரப்பினர்.
அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் அவ்வாறான அச்சுறுத்தலுக்கு இடமிருக்கின்றது என்று விஜயதாச ராஜபக்ஷவே நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு முதல் முறையாகக் கொண்டுவந்தார்.
எனவே உயிர்த்த ஞாயிறு தற்கொலை தொடர்பிலான உண்மையான தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசாங்கத்தில் உள்ள தரப்பினரிடமிருந்தே அந்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.
ஹரின் பெர்ணான்டோ எதிர்க் கட்சியில் இருக்கும்போது தாக்குதல் தொடர்பில் நீண்டளவில் காரணங்களை முன்வைத்தார்.
மனுஷ நாணயக்காரவும் அவ்வாறே.
அதேபோன்று தாக்குதல் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக விஜயதாச ராஜபக்ஷ முதன் முறையாக நாடாளுமன்றத்தில் கூறினார்.
எனவே வெளிநாடுகளில் வெளியிடும் காணொளிகளை வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்பு விஜயதாச ராஜபக்ஷ, மனுச நாணயக்கார மற்றும் ஹரின் பெர்ணான்டோ ஆகியோரிடம் முதலில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு அடுத்ததாக இந்தத் தாக்குதலுடன் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள பிள்ளையானும் ஆளுங்கட்சியிலேயே இருக்கின்றார்.
எனவே உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த, குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள சகலரும் அரசாங்கத்திலேயே இருக்கின்றனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மை வெற்றியை பெற்றுக்கொண்டபோது உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பிலான கதைகள் இருக்கவில்லை.
எனவே கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காகத்தான் இவ்வாறான தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
நான் எதிர்க் கட்சியில் இருந்தாலும்கூட இந்த விடயத்தை நான் கூறியே ஆக வேண்டும்.
ஜெனிவான அமர்வு இடம்பெறவிருக்கும் காலப்பகுதியில் இவ்வாறான காணொளிகள் வெளியிடப்படுவது என்பது தமிழீழ விடுதலை புலிகள், பிரிவினைவாதிகளின் சூழ்ச்சியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகின்றது.
நான் இந்த நாட்டில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறும் நபர். அதேபோன்று நாட்டில் தமிழ்மொழி பேசும் தர்பபினருக்கு அசாதாரணம் இழைக்கப்பட்டுள்ளது எனவே அவர்களுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்கப்படும் என்று கூறும் நபர்.
இந்த அரசாங்கத்துடன் எந்த கொடுக்கல் வாங்கலிலும் நான் ஈடுபடவில்லை. எனவே, இந்த அரசாங்கம் உடனடியாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நபர்.
ஆனாலும்கூட, இவ்வாறான காணொளிகளை வைத்து மீண்டும் இனங்களுக்கு இடையில் முறுகலை தோற்றுவிக்க முயன்றால் அதற்கு நான் நிச்சியம் எதிர்ப்பையே தெரிவிப்பேன்.