ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள பல்கலைகழகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காபுல் பல்கலைகழகத்தில் ஈரான் புத்தக கண்காட்சி இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பல துப்பாக்கிதாரிகள் காபுல் பல்கலைகழகத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர் என ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல்கலைகழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் எனவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புத்தக கண்காட்சியை திறந்து வைப்பதற்கு அரசாங்க அதிகாரிகள் வருகை தரவிருந்த தருணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் சிதறியோடுவதையும் துப்பாக்கி சத்தங்கள் கேட்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
மாணவர்கள் மதில்களின் மேலாக பாய்ந்து ஓடுவதையும வீடியோக்கள் காண்பித்துள்ளன.
ஆயுதமேந்திய நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தலிபான் இந்த தாக்குதலைமேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.