கிழக்கில் கொரோனா எகிறுகிறது! தொற்று 72ஆகியது!

0
1552

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச்செல்கிறது. கிழக்கில் இதுவரை 72பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இவர்களில் மினுவாங்கொட கொத்தணி மூலமாக 04பேரும் பேலியகொட கொத்தணி மூலமாக 68பேரும் தொற்றுக்கிலக்காகியிருந்தனர்.
கிழக்கு மாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் மேற்படி தகவலைத் தெரிவித்தார்.
கிழக்கில் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திபிரிவில் அதிகூடிய தொற்றுக்கள் 35 இனங்காணப்பட்டிருந்தன.அடுத்தபடியாக மூதூரில் 9பேரும் பொத்துவிலில் 7பேரும் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இறுதியாக மூதூரில் மூவரும் கல்முனைப்பிராந்தியத்தில் நால்வரும் திருமலையில் ஒருவரும் புதிதாக இனங்காணப்பட்டிருந்தனர்.
அம்பாறை மகாஓயா தெஹியத்தகண்டிய மற்றும் கந்தளாய்ப்பிரிவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர் நால்வரும் மினுவாங்கொட கொத்தணிமூலம் தொற்றுக்குள்ளானவர்கள். ஏனைய 68பேரும் பேலியகொட மீன்சந்தைகொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களாவர்.
கல்முனையில் மேலும் 4 பேர் கொரோணா தொற்றாளர்களாக நேற்று அடையாளப் படுத்தப் பட்டார்கள். மருதமுனையில் இருந்து ஒருவரும் அக்கரைப்பற்றில் இருந்து ஒருவரும் இறக்காமம் பிரதேசத்தில் இருந்து இருவருமாக மொத்தமாக 4 பேர் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கல்முனைப் பிராந்தியத்தில் மொத்தமாக 17 பேர் கொரோணா நோயாளிகளாக சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார்கள் என கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவிக்கிறார்.
மேலும் இற்றைப்படுத்தப்பட்ட கிழக்கு கொவிட் தகவல்மைய தரவுகளின்படி,
கிழக்கிலுள்ள ஜந்து கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 475கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று வரை 564பேர் மேற்படி 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 87பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் இடமாற்றப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 222பேர் அனுமதிக்கப்பட்டு 75பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 145பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். இருவர் இடமாற்றப்பட்டிருந்தனர்.
மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 92 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 103 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 68பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 79 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை கிழக்கில் சந்தேகத்திற்கிடமான 3404பேரில் 1258பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதேவேளை கிழக்கிலுள்ள 12 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3052பேர் அனுமதிக்கப்பட்டு 3764பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 108பேருக்குச் சாதகமான அதாவது தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது. 125பேர் குணமாகிவீடு திரும்பியுள்ளனர். எனவே தற்போது மேற்படி 12நிலையங்களிலும் 2819பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.