கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதம்

0
26

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாத சிந்தனைகளை பரப்பும் நோக்கில் செயல்படும் முஸ்லிம் அமைப்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் பொலிஸ் புலனாய்வுத்துறை மேலதிக தவகவல்களை கண்டறியும் நோக்கில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

மிகவும் தெளிவாக முஸ்லிம் அமைப்பு என்று கூறுவதிலிருந்து விடயத்தின் தார்ப்பரியத்தை புரிந்து கொள்ள முடியும். இது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் புதிய சவாலாகவும் – அதே வேளை தற்போது அரசாங்கம் காண்பித்துவரும் மென்மையான அரசியல் முகத்தை தொடர்ந்தும் பேண முடியாமல் போகும் நிலைமையையும் ஏற்படுத்தலாம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் தொடர்பான பார்வையை இலங்கை அரசு புறம்தள்ளியே வந்திருக்கின்றது. அதற்குமப்பால் யுத்த காலத்தின் தேவைக்காக ஊர்காவல் படைக் கட்மைப்பையும் பேணிவந்திருக்கின்றது.

இந்தப் பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் சுதந்திரமாக காலூன்றுவதற்கான வாய்ப்பும் உருவாகியது. கிழக்கு மாகாணம் தங்களுக்கானது என்னும் சிந்தனையும் மெதுவாக முஸ்லிம் குழுக்கள் மத்தியில் சந்தடியின்றி வளர்ந்தது. அதன் விளைவே இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனையை பேணி வளர்ப்பதற்கான வாய்ப்பையும் சூழலையும் கனியச் செய்தது. கடந்த ஆண்டு, ஒக்ரோபர் மாதம், கிழக்கிலங்கையின் அறுகம் குடாவில் தங்கியிருந்த இஸ்ரேலியர்களை தாக்குவதற்கு திட்டம் தீட்டுமளவுக்கு சர்வதேச இஸ்லாமிய தொடர்புகள் கிழக்கில் வலுவாக இருந்திருக்கின்றன.

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கிழக்கில் வளர்வதற்கான சூழலை கண்டும் காணாமல் விட்டதன் விளைவாகவே, ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறுவதற்கான சூழல் உருவாகியது. கிழக்கிலங்கையில் இயங்கும் முஸ்லிம் மத அமைப்புகள் மற்றும் அடிப்படைவாத குழுக்கள் தொடர்பில் தீவிரமான அவதானத்தை இலங்கை படைத்துறை வைத்திருந்தால், அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறுவதற்கான புறச் சூழல் கனிந்திருக்காது.

கிழக்கிலங்கையை – குறிப்பாக காத்தான்குடியை அண்டிய முஸ்லிம்களின் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமிய அரசுக்கான ஆதரவுச் சிந்தனைகள் வேரூன்றியிருக்கின்றன. ஆனால், இந்த விடயத்தில், கோட்டாபய தரப்பின் உள்ளூர் அரசியல் தொடர்பு அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டதால், இஸ்லாமிய தீவிரவாத சிந்தனைக்கான களம் தொடர்பிலும், அதனைத் தொடரக் கூடிய குழுக்கள் மீளெழுச்சி பெறலாம் என்னும் விடயங்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டன.

முஸ்லிம் அரசியல்வாதிகளும் ராஜபக்ஷக்களை முன்வைத்து கருத்துக் கூறினார்களே தவிர, தங்கள் சமூகத்துக்குள் இவ்வாறான சிந்தனை கொண்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதை பொது வெளிகளில் ஏற்றுக்கொள்ளும் அரசியல் துணிவற்றவர்களாகவே இருக்கின்றனர். பிள்ளையான் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது அதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் இரசித்தனர். ஆனால், தற்போது அமைச்சரவை பேச்சாளர் வெளியிட்டிருக்கும் கருத்து தொடர்பில் எவ்வாறான பதிலைக் கொண்டிருக்கின்றனர்? இந்த விடயமானது, கிழக்கிலங்கையில் வாழும் ஈழத் தமிழ் மக்களுக்கும் ஓர் அபாய எச்சரிக்கையாகும்.