யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால், சிவில் சமூகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவோடு முன்னெடுக்கப்படும், உரிமைக்கான பேரணி இன்று கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தை வந்தடைந்தது.
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கறுப்பு தினமாகப் பிரகடனப்படுத்தி, தமிழ் மக்களின் அரசியல் மற்றும் நில உரிமைகளைக் கோரி இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.
பேரணி திருகோணமலையை வந்தடைந்தபோது, திருகோணமலை தமிழ் உணர்வாளர்கள், பேரணியை உற்சாகத்தோடு வரவேற்றனர்.
அத்;தோடு தாமும் பேரணியோடு பயணித்து, ஆதரவை வெளிப்படுத்தினர்.
கடந்த 4ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமான பேரணி, கிளிநொச்சி முல்லைத்தீவு ஊடாக கிழக்கு மாகாணத்திற்குள் நுழைந்தது.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகளும் பேரணிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாளை தினம் பேரணி மட்டக்களப்பு நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் மற்றும் அரசியல் தரப்புக்கள் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணிக்கும் உரிமைப் பேரணியை வரவேற்பதற்கான ஆயத்தங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.