அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி அண்டனி கதையை வழி நடத்திச் செல்லும் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் குமார் தயாரித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தில் ரவி படிசா, தாஷ்மிகா, லிசி ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார்.
படத்தை பற்றி தயாரிப்பாளர் பேசுகையில், ” குயிலி திரைப்படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒரு அம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்?எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படி போராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. இந்தப் படம் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கிறது” என்றார்.