சட்டத் தேவையின் நிமித்தமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக மாவை சேனாதிராசா நியமிக்கப்பட்டார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
பங்காளிக் கட்சிகளின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரமே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், கூட்டமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நியமனத்தை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் ஆட்சேபிக்க மாட்டாரென்றும், அவர் ஆட்சேபிக்க வேண்டிய தேவையில்லை என்றும் சீ.வீ.கே. குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பின் செயலாளர் பதவி என்பது ஒரு சட்டம் சம்மந்தப்பட்ட விடயம். செயலாளர் பதவி என்பது சட்ட தேவை. அதனை யாரும் ஆட்சேபிக்க முடியாது. அப்படிப் பார்த்தால் இதுவரையில் செய்து வந்ததே தவறு. 2009 ஆம் ஆண்டிலிருந்து இந்தச் சட்டம் அமுலிலிருக்கிறது. இதனை சம்பந்தனும் ஆட்சேபிக்க மாட்டார். ஏனெனில் இது சட்ட தேவை. ஆனபடியால் செயலாளராக தற்போது மாவை சேனாதிராசா நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
கூட்டமைப்பில் தற்போது மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்ற நிலையில் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
சட்டப்படி கடமைகளைச் செய்ய செயலாளர் தேவை. அதற்கமைய கூட்டமைப்பின் செயலாளராக மாவை சேனாதிராசா நியமிக்கப்பட்டுள்ளார்-என்றார்.